/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடரும் அத்துமீறல் சோதனை அவசியம்
/
தொடரும் அத்துமீறல் சோதனை அவசியம்
ADDED : மே 18, 2025 11:19 PM

பல்லடம்; பல்லடத்தில் இருந்து திருச்சி - -கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கொச்சி, பொள்ளாச்சி, உடுமலை செல்லும் மாநில நெடுஞ்சாலை ஆகியன கேரள மாநிலத்தை இணைக்கின்றன. இதன் காரணமாக, கேரள மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், பல்லடம் வழியாகவே வந்து செல்கின்றன.
இவ்வாறு வந்து செல்லும் சில வாகனங்களில், கேரளாவில் இருந்து பல்வேறு கழிவுகளும் தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுவதாக சந்தேகம் உள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக, நேற்று முன்தினம், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற லாரி ஒன்றில், கடும் துர்நாற்றம் வீசியது.
சரக்கு லாரியைப் போன்றே, தார்பாய் கொண்டு மூடப்பட்ட அந்த லாரிக்குள், அழுக்கு படிந்த துணிகள், பிளாஸ்டிக் காகிதங்கள் தொங்கியபடி இருந்தன. பல்லடம் நகரப் பகுதி வழியாக சென்ற இந்த லாரியில் இருந்து வெளியேறிய கடுமையான துர்நாற்றத்தால், இதர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறுகையில், 'பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக, அடிக்கடி இதுபோன்ற துர்நாற்றம் வீசும் வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, கோவையில் இருந்து தான் இதுபோன்ற லாரிகள் வருகின்றன. இவற்றில் என்ன கொண்டு செல்லப்படுகிறது; லாரி எங்கு செல்கிறது என்ற விவரங்கள் தெரியவில்லை. இவை, கேரள மாநில கழிவுகள் ஏற்றி வர வாய்ப்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம்.
துர்நாற்றம் வெளியேற்றியபடி வரும் வாகனங்களை அதிகாரிகள் இவ்வாறு அனுமதித்தனர் என்று தெரியவில்லை. இதுபோன்ற வாகனங்களை உரிய சோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என்றனர்.