/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்ட தண்ணீர் பங்கீட்டில் சர்ச்சை
/
அத்திக்கடவு திட்ட தண்ணீர் பங்கீட்டில் சர்ச்சை
ADDED : பிப் 20, 2025 11:55 AM
திருப்பூர்:
'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து குளம், குட்டைகளுக்கும் சரிசம அளவில் நீர் வினியோகம் செய்யப்படுவதில்லை' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர், பம்பிங் செய்யப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள, 6 நீரேற்று நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் உதவியுடன், குழாய் வழியாக, 1,045 குளம், குட்டைகளுக்கு செலுத்தப்படுகிறது. காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், வினாடிக்கு, 250 முதல், 300 கன அடிநீர் வெளியேறினால் தான், ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும் உள்ள ஆறு மோட்டார்களும் முழுமையாக இயங்கும்; அப்போது அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் போய் சேரும் என்பதுதான் யதார்த்த நிலை.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
மொத்தம் 1,046 கி.மீ., நீளமுள்ள குழாய் வழியாக, நீர் செறிவூட்டும் பணி நடக்கிறது; 83 இடங்களில் கிளைக்குழாய்கள் உள்ளன. அவற்றின் நீளம், ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுகிறது. சில இடங்களில் ஒரே குழாயில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் அதிகமான பெரிய குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. சில இடங்களில், ஒரு குழாயில் இருந்து சிறிய குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது.
பவானி ஆற்றில், வினாடிக்கு, 250 கன அடிக்கும் குறைவாக, அதாவது, 100 - 200 கன அடி நீரோட்டம் இருக்கும் போது, ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும், 2 மோட்டார்கள் மட்டுமே இயக்கப்படுகிறது; நீர் அழுத்தம் குறைவதால், நீர் பங்கீடு என்பது அனைத்து குளங்களுக்கும் சீராக இல்லை. இதனால், அந்த நீரேற்று நிலையம் சார்ந்த கடைநிலையில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் போய் சேர்வதில்லை.
ஒவ்வொரு நீரேற்று நிலையங்கள் சார்ந்த அனைத்து குளம், குட்டைகளுக்கும், ஒரே சீராக நீர் வினியோகிக்கப்பட வேண்டுமானால், நேரத்தை மையமாக வைத்து, நீர் பங்கீடு முறையை பின்பற்ற வேண்டும். நீர் மேலாண்மையின் மாதிரி திட்டமாக உள்ள இத்திட்டப்பணியை கண்காணிக்க, நீர்வளத்துறை அதிகாரிகள், 'கான்ட்ராக்ட்' நிறுவனத்தினர், விவசாயிகளை உள்ளடக்கி ஒழுங்காற்றுக்குழு அமைத்து, திட்டத்தில் தென்படும் குறைகளை அவ்வப்போது சரி செய்தால், திட்ட பயன் முழு அளவில் மக்களை சென்றடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.