/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 09:54 PM
உடுமலை; தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பணி நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழக ரேஷன் கடைகளில், 'புளூ டூத்' முறையில், மின்னணு எடை தராசு இணைக்கப்படும் போது, ஒரு ரேஷன் கார்டுக்கு பொருள் வினியோகம் செய்ய, 10 நிமிடம் வரை தேவைப்படுகிறது.
ஏற்கனவே, கைரேகை பதிவு, கருவிழிப்பதிவு, நெட் - ஒர்க் சிக்கல் காரணமாக, பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுகிறது. எனவே, புளு டூத் வாயிலாக விற்பனை என்பதை ரத்து செய்ய வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கிடங்கிலிருந்து, ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகின்றன.
சரியான அளவு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில், 40 சதவீதம் பெண்கள், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், உதவியாளர் நியமிக்கவும், பதவி உயர்வில் சமவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் சாமியப்பன் கூறுகையில், ''ரேஷன் கடை பொது வினியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இன்று (27ம் தேதி) பணி நிறுத்தம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், வரும் ஜூலை, 14 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட, மாநில மையம் முடிவு செய்துள்ளது,'' என்றார்.