/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தென்னைகளை காக்க தேவை ஒருங்கிணைந்த நடவடிக்கை'
/
'தென்னைகளை காக்க தேவை ஒருங்கிணைந்த நடவடிக்கை'
ADDED : ஏப் 09, 2025 11:08 PM
பல்லடம், ;''தென்னையை பாதுகாக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:
தமிழகத்தின், 29 மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட வாடல் நோயால், 5 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும், 40 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் வெட்டப்பட உள்ளன.
கேரள வாடல் நோய், தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் இந்த நோய் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த, 6 ஆண்டுகளாக, வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் எவ்வித ஆராய்ச்சியும், கண்டுபிடிப்பும் செய்யாமல் தொடர்ச்சியாக அரசு நிதியை வீணடித்து வருகின்றனர்.
வெள்ளை ஈ தாக்குதலால் தமிழகம் முழுவதும் உள்ள தென்னைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி, 60 சதவீதமாக குறைந்துள்ளது. ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கையால் மட்டுமே இவற்றை ஒழிக்க முடியும். இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு தமிழக அரசு, வெறும் 12 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இரண்டு தாலுகாக்களுக்கு கூட இந்த தொகை போதாது.
வாடல் நோய், வெள்ளை ஈக்கள் பாதிப்புகள் தென்னை அதிகமாக உள்ள இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இது போன்ற நோய்கள் ஏற்பட்டபோது எப்படி கட்டுப்படுத்தினார்கள் என்ற ஆய்வு செய்யாமலேயே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது.
வாடல் நோய் மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

