/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
/
இ-நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
ADDED : ஜன 09, 2025 11:33 PM

- நிருபர் குழு -
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ கொப்பரை, 142 ரூபாய்க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, உடுமலை, புக்குளம், பூலாங்கிணர், சுங்கம், விளாமரத்துப்பட்டி, குறிஞ்சேரி, குரல்குட்டை, பூளவாடி, பெரியவாளவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 33 விவசாயிகள், 64 மூட்டை அளவுள்ள, 3,200 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தர கொப்பரை, 135 முதல், 142 ரூபாய் வரையும், இரண்டாம் தரம், 78.10 முதல், 130 ரூபாய் வரையும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''கொப்பரைக்கு நல்ல விலை கிடைப்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொப்பரை கொண்டு வருகின்றனர். கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது,'' என்றார்.
* ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமையில் கொப்பரை ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 53 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 138.17 முதல் 146.25 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை, 77 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 103.19 முதல், 125.57 ரூபாய் வரை விலை கிடைத்தது. மொத்தம், 130 கொப்பரை மூட்டைகளை, 27 விவசாயிகள் கொண்டு வந்தனர்; 10 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 7.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம், 58.5 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.