/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரந்தரத்தீர்வு நோக்கி நகர்கிறது மாநகராட்சி
/
நிரந்தரத்தீர்வு நோக்கி நகர்கிறது மாநகராட்சி
ADDED : செப் 07, 2025 10:55 PM

திருப்பூர்; பாறைக்குழிகளில் குப்பை கொட்டும் நிகழ்வில், நிபுணர் குழுக்கள் ஆய்வு செய்து அளித்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது. இயற்கை மாசுபடாது; பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகரில் தினமும் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. தற்போது முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. பாறைக்குழி செல்லும் வழியில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவினர்பரிந்துரைகள் ஏற்பு குப்பை அகற்றும் விவகாரத்தில் மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:
பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்படும் நிலையில், அப்பகுதியில் நிலம், காற்று, நீர் மாசுபடாத வகையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னை அண்ணா பல்கலை, கோவை ஜி.சி.டி., மற்றும் சி.ஐ.டி., கல்லுாரிகளைச் சேர்ந்த நிபுணர் குழு இங்கு ஆய்வு மேற்கொண்டது.
குழுவினரின் பரிந்துரைகளை ஏற்று குப்பைகள் பாறைக்குழிகளில் பாதுகாப்பான முறையில் கொட்டப்படுகின்றன. இதற்காக பிரத்யேக 'ஷீட்' பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பை கழிவுகளால் மக்கள் அச்சப்படும் வகையிலான மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாறைக்குழிகளில் குப்பை கொட்டுவது குறுகிய கால நடவடிக்கை மட்டுமே. தற்போது பயன்பாட்டில் உள்ள எம்.சி.சி., எனப்படும் நுண்ணுர உற்பத்தி மையங்களில் உள்ள மெஷின்கள் தலா 5 டன் குப்பைகளை கையாளும் வகையில் மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் 100 டன் கழிவுகள் கையாளப்படும்.
குப்பைகளை வீசினால்கடைகளுக்கு 'சீல்' அடுத்ததாக இறைச்சி கழிவுகள் கையாள ஏழு அணிகள் அமைக்கப்பட்டு தனியாக சேகரிக்கப்படுகிறது. கழிவுகளை முறையாக வாகனங்களுக்கு வழங்காமல், தன்னிச்சையாக ெவளியே வீசும் கடைகள் 'சீல்' வைக்கப்படும்.
மாநகராட்சியைப் பொறுத்தவரை மருத்துவ கழிவுகள் அனைத்தும் உரிய மருத்துவமனைகள் வாயிலாக முறையாக அழிக்கப்படுகிறது. எந்த இடத்திலும் இக்கழிவுகள் வெளியே வருவதில்லை.
குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கவும், சி.என்.ஜி., உற்பத்தி மையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்கள், சென்னையில் இது குறித்து உரிய அதிகாரிகளைச் சந்தித்து இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மிக விரைவில் இப்பணிகள் முடிந்து இரு மையங்களும் செயல்பாட்டைத் துவங்கும். கோவையை மையமாகக் கொண்டு 2000 டன் கழிவுகள் கையாளும் மின் உற்பத்தி மையம் துவங்குவதற்கான பணிகளும் அரசு தரப்பில் மும்முரமாக நடந்து வருகிறது, என்றார்.
வதந்திகளுக்கு இரையாகாதீர்
திருப்பூரைப் பொறுத்தவரை வீடு, கடை, ஆலை என்று மூன்று வகைகளில் கட்டடங்கள் அனைத்து பகுதிகளிலும் இணைந்துள்ளன. மேலும், 2.61 லட்சம் சொத்து வரி விதிப்புகள் இருந்தாலும், அவற்றை விட கூடுதல் எண்ணிக்கையில் லைன் மற்றும் காம்பவுண்ட் வீடுகள் என உள்ளன. குப்பை வரி செலுத்தாத வீடுகளுக்கும் சேர்த்துத் தான் திடக்கழிவு மேலாண்மையை மேற்கொள்ளும் நிலை மாநகராட்சிக்கு உள்ளது.
அதுவரை குறுகிய கால நடவடிக்கையாகத் தான் பாறைக்குழி பயன்படுத்தப்படுகிறது. எந்த பகுதி மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது. இதில் தனிப்பட்ட நபர்களின் தவறான பிரசாரம், வீண் வதந்தி மற்றும் வழிநடத்துதலுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது. இங்கு வசிக்கும் 14 லட்சம் பேரின் பிரச்னைகளையும் முறையாக அணுக வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
- தினேஷ்குமார்,
மேயர்.
2 நாள் மக்காத குப்பை
''அடுத்த கட்டமாக அனைத்து வீடுகளுக்கும் குப்பைகள் தரம் பிரித்து வழங்கும் வகையில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, கூடை வழங்கி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அது பிரித்து பெறப்படும். இதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தனியார் நிறுவனம் மூலம் திடக்கழிவு மேலாண்மை பணி என்பது இங்கு மட்டும் ஈடுபடவில்லை. தமிழகம் முழுவதும் அரசு கொள்கை முடிவின்படி இது நடக்கிறது. கடந்த 2013 முதல் தனியார் துறை தான் இதில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிர்வாகம் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் இதில் எடுக்கவில்லை.
அடுத்த கட்டமாக 5 நாள் மக்கும் குப்பை, இரண்டு நாள் மக்காத குப்பை பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள மூன்று சுகாதார மேற்பார்வையாளர்கள் 15 என எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்காணிப்பு பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்படும்'' என்கிறார் மேயர்.
காங்கயம் ரோடு முதலிபாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சுமுகமாக பேசி முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், மக்களை சந்தித்து ஆலோசனை நடத்தாமல் புறக்கணித்தனர்.
குப்பை விவகாரத்தில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள், சுற்று வட்டாரத்தில் இருக்க கூடிய மக்கள் என, யாரையும் சந்தித்து நேரில் பேச அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
நகரில் ஆங்காங்கே குப்பை தொடர்பாக ஏதாவது ஒரு இடத்தில் மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த இடத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க களத்துக்கு செல்லும் போலீசார் மக்களிடம் பல வகையில் பேச்சு நடத்தினாலும் கலைந்து செல்ல மறுக்கின்றனர்.
அதன்பின் கைது செய்யப்படும் போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு போன்றவை ஏற்படுகிறது. இது விஷயத்தில், அதிகாரிகள் மக்களை தெளிவுபடுத்த யோசிக்கின்றனர். இதனால், களத்தில் மக்களிடம் சமாதானம் பேச முடியாமல் போலீசார் சிக்கி தவிக்கின்றனர்.
இதுதவிர, பாறைக்குழி, குப்பை எடுத்து செல்லும் லாரியை போலீசார் தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள், அதிகாரிகள் என, இருதரப்புக்கு இடையே போலீசார் சிக்கி கொண்டு, தவித்துவருகின்றனர்.