/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வு உறுதி சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சி முனைப்பு
/
தீர்வு உறுதி சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சி முனைப்பு
தீர்வு உறுதி சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சி முனைப்பு
தீர்வு உறுதி சொத்து வரி விவகாரத்தில் மாநகராட்சி முனைப்பு
ADDED : டிச 23, 2024 04:20 AM
திருப்பூர் சொத்து வரி உயர்வு குறித்து பல்வேறு அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை தயார் செய்துள்ளது. ''அரசு விதிகளை மீறாமலும், நிர்வாகத்துக்கு இழப்பு இன்றியும், பொதுமக்களை பாதிக்காத வகையிலும் விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும்'' என்று மேயர் தினேஷ்குமார் கூறினார்.
மாநகராட்சி சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மாமன்றக் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலை மறியலும் நடந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., மற்றும் கம்யூ., கவுன்சிலர்களும் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மறியல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்பட்டது. பா.ஜ., சார்பில் மாநகராட்சி முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. காங்., - கம்யூ., - வி.சி.க., கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து வணிகர்கள் பேரவை சார்பில் கடை முன் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம், மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் ஆகியன நடந்தன.
கட்டணச் சலுகை
மேயர் தினேஷ்குமார், நமது நிருபரிடம் கூறியதாவது:
சொத்து வரி உயர்வு என்பது தமிழகம் முழுவதற்குமான பிரச்னை. இது ஏதோ திருப்பூர் மாநகராட்சிக்கு மட்டுமான வரி உயர்வு என்பது போல், சில அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி குழப்பம் விளைவித்து வருகின்றன. திருப்பூர் தொழில் நிலை கருதி திடக்கழிவு மேலாண்மைக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது.
வரி அதிகரிப்பு ஏன்?
சொத்து வரி உயர்வு குறித்து பல்வேறு அமைப்பினர் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்தும், மாநகராட்சி பகுதியில் உள்ள வரி விதிப்புகள் விவரம், வரி வசூல் நிலவரம் ஆகியன குறித்தும் துல்லியமாக கணக்கீடு செய்தும் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் இணைக்கப்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் முன்னர் விதிக்கப்பட்ட வரியினங்களில் மாநகராட்சி என்பதால் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், வரி விதிப்பு கட்டடங்களை ஆய்வு செய்து, உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாலும் வரியினங்கள் அதிகரித்துள்ளது.
வரி வசூல் குறைவு
இதுபோன்ற மறு ஆய்வு வரி விதிப்புகள் அடிப்படையில் ஒப்புநோக்கும் போது, சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாநகராட்சிகளைக் காட்டிலும் திருப்பூர் மாநகராட்சியில் வரி விதிப்பு மிகவும் குறைவு.
வரி வசூல் என்பது, 138 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது. மத்திய நிதிக்குழு மானியங்களின் கீழ், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி பெற வரியினங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆலோசனை தீவிரம்
உரிய துறை அதிகாரிகள், துறை அமைச்சர் தரப்பிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, உரிய விவரங்கள் கருத்துரு அடிப்படையில் அறிக்கையாக அளிக்கப்படும். அதனடிப்படையில், அரசு விதிகளை மீறாமலும், நிர்வாகத்துக்கு இழப்பு இன்றியும், பொதுமக்களை பாதிக்காத வகையிலும் விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.600 கோடி கடன் சுமை
''மாநகராட்சிக்கு, 600 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதற்கான வட்டி, திரும்ப செலுத்த வேண்டிய தவணை போன்ற செலவினங்கள் உள்ளன. சொத்து வரியினங்கள் மூலம் பெறப்படும் வருவாய் நிர்வாகச் செலவுகளை மேற்கொள்ள மட்டுமே ஏதுவாக உள்ளது. இது போல் பல்வேறு நெருக்கடிகள் நிர்வாகத்துக்கு உள்ளது. மக்கள் மத்தியில் வதந்தியை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தும் நாடகம் நடக்கிறது'' என்று சொல்கிறார் மேயர் தினேஷ்குமார்.

