ADDED : ஏப் 08, 2025 06:29 AM

பல்லடம்; பல்லடம் நகராட்சி, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா, கலெக்டரிடம் நேற்று அளித்த மனு:
பல்லடம் நகராட்சி நிர்வாகம், வடுகபாளையம்புதுார் கிராமத்தில் உள்ள பூமிதான நிலத்தில், நகரப் பகுதியில் உள்ள கழிவு நீரை கொண்டு சென்று, சுத்திகரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. திட்டத்துக்கு யார் டெண்டர் எடுத்தார்கள் என்பது கூட தெரியவில்லை. மக்களிடம் கருத்து கேட்கவும் இல்லை. ஓடையில் கழிவு நீரை கலக்கும் நகராட்சி நிர்வாகமே, தற்போது அதை சுத்திகரிப்பு செய்து கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சி கமிஷனர் மனோகரனிடம் கேட்டதற்கு, 'கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகராட்சி நிர்வாக நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகரப் பகுதியில் தேங்கும் கழிவு நீர் மற்றும் கொசு தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாது. சுத்திகரித்த நீரை மீண்டும் பயன்படுத்த போகிறோம் என்பதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை'' என்றார்.