/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆப்சென்ட்' மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிப்பு
/
'ஆப்சென்ட்' மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிப்பு
ADDED : பிப் 11, 2025 11:34 PM
உடுமலை; பொதுத்தேர்வின் முதற்கட்டமான செய்முறைத்தேர்வுகள் பள்ளிகளில் நடக்கிறது. உடுமலை சுற்றுப்பகுதியில், மார்ச் மாதம் துவங்க உள்ள நடப்பாண்டு தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் விதமாக ஆலோசனைகளையும், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளாக நடத்துகின்றனர்.
இதில் தற்போது, தேர்வு பயத்தாலும், சரியாக படிக்காத காரணத்தாலும், தேர்வை புறக்கணிக்க எண்ணி, பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பினும், தேர்வை எதிர்கொள்ள வைப்பதற்கு அரசு பள்ளிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
இறுதி நேரத்தில் அனைத்து பாடங்களையும் படிப்பதால், பலரும் தேர்வு நேரத்தில் பாடங்களை மறக்கின்றனர். இதனால் தேர்ச்சியடைய முடியாமல் போகுகிறது.
தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என்ற பயத்தால், மாணவர்கள், தேர்வுக்கு முன்னரும், தேர்வின் போதும் பள்ளிக்கு விடுப்பு எடுக்கின்றனர். இவ்வாறு அச்சப்படும் மாணவர்களை ஊக்கப்படுத்த பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.
பள்ளிகளில் நுாறு சதவீதம் மாணவர்களை, தேர்வுக்கு வரவழைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. பெற்றோரும் தேர்வுக்கு முக்கியத்துவம் அளித்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும்.
தற்போது நடக்கும் செய்முறை தேர்வுகளில் மாணவர்களை பங்கேற்க செய்வதே பெரிதும் சவாலாக உள்ளது. பொதுத்தேர்வில் கட்டாயம் நுாறு சதவீத பங்கேற்பை உறுதி செய்வதற்கு மாணவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.