/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழியை மறித்து சுற்றுச்சுவர்: அகற்ற கோர்ட் உத்தரவு
/
வழியை மறித்து சுற்றுச்சுவர்: அகற்ற கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 26, 2025 11:07 PM

திருப்பூர்; செட்டிபாளையம் பகுதியில், ஏ.ஐ.பி.இ.ஏ., காலனி பொது வழித்தடத்தை மறித்து சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. அதனருகே கோவில் அமைக்கும் முயற்சி எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் பகுதியில் ஏ.ஐ.பி.இ.ஏ., காலனி உள்ளது. வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் இந்த குடியிருப்பு பகுதியானது, 1990ல் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த குடியிருப்பு பகுதி நகரமைப்பு அனுமதி பெற்றது. இதற்கு செல்லும் வழி உள்ளாட்சி அமைப்புக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் இதனருகே சில ஆண்டுகள் முன், ஸ்ரீஆஞ்சநேயா கார்டன் என்ற பெயரில் மற்றொரு குடியிருப்பு பகுதி உருவானது. இந்த குடியிருப்பு பகுதிக்கு வங்கி அலுவலர் காலனியின் பொது வழித்தடத்தை பொது வழித்தடமாக வரை படத்தில் காட்டியுள்ளனர்.
இந்நிலையில், அங்கு முழுமையாக அனைத்து மனைகளிலும் வீடுகள் உருவான நிலையில், இந்த வழியை மறைத்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, மேலும் சுற்றுச் சுவர் மீது எச்சரிக்கை அறிவிப்பும் எழுதி வைத்தனர்.
இதையடுத்து வங்கியாளர் காலனியைச் சேர்ந்த பாஸ்கர், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பினார். இதில் எந்தப் பயனும் இல்லை.
இதனால், சென்னை ஐகோர்ட்டில் ஆக்கிரமிப்பு சுவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர், ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி, அது குறித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கடந்த இரு நாள் முன்னர், அப்பகுதியில் சுற்றுச்சுவர் அருகே, மேடை அமைத்து கோவில் கட்ட முயற்சி நடந்தது. தகவலின் பேரில் நல்லுார் போலீசார் விரைந்து சென்று மேடையை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.