/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேமராக்கள் செயல்படாததால் குற்றத்தடுப்பில் பின்னடைவு! திருவிழா துவங்கும் முன் நடவடிக்கை தேவை
/
கேமராக்கள் செயல்படாததால் குற்றத்தடுப்பில் பின்னடைவு! திருவிழா துவங்கும் முன் நடவடிக்கை தேவை
கேமராக்கள் செயல்படாததால் குற்றத்தடுப்பில் பின்னடைவு! திருவிழா துவங்கும் முன் நடவடிக்கை தேவை
கேமராக்கள் செயல்படாததால் குற்றத்தடுப்பில் பின்னடைவு! திருவிழா துவங்கும் முன் நடவடிக்கை தேவை
ADDED : மார் 16, 2025 11:59 PM

உடுமலை; உடுமலை நகரில், பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக மாறி விட்டன; தேர்த்திருவிழா துவங்க உள்ள நிலையில், குற்றத்தடுப்பு பணிகளுக்காக கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை நகரில், பிரதான ரோடுகள், குடியிருப்புகளுக்கான ரோடுகள் என, 90 கி.மீ., துாரம் ரோடு அமைந்துள்ளது.
இப்பகுதிகளில் முன்பு, தனியார் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஒரு சில குடியிருப்போர் நல சங்கங்கள் வாயிலாக, 560 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், பிரதான ரோடுகளில், கேமராக்கள் இல்லாததது பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நகராட்சி சார்பில், 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு, தாரபுரம் ரோடு, திருப்பூர் ரோடு என அனைத்து பிரதான ரோடுகள், நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், ரோடு சந்திப்புகள் என நகரின் அனைத்து பகுதிகளிலும், கேமராக்கள் பொருத்தப்பட்டு, உடுமலை போலீஸ் ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட, கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டது.
கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஒரு சில மாதங்கள் மட்டும் இயங்கின. தொடர்ந்து கேமராக்கள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இணைப்பு பராமரிப்பு கைவிடப்பட்டது.
செயல்படுவது அவசியம்
போலீஸ் தரப்பில், கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்குவதில் இழுபறி உட்பட காரணங்களால், பராமரிப்பை மீண்டும் நகராட்சியே மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
பராமரிப்பு மற்றும் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி காரணமாக, பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதில்லை; படிப்படியாக கண்காணிப்பு அறையும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இதனால், குற்றத்தடுப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர ரோடுகளில், திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
விரைவில், உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. விழாவுக்காக நோன்பு சாட்டியதும், நாள்தோறும் பல ஆயிரம் பேர், நகரிலுள்ள கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
இதையொட்டி, நகரின் பிரதான ரோடுகளில் குற்றங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவது அவசியம்.
எனவே, நகரின் பிரதான ரோடுகளிலும், இதர இடங்களிலும் செயல்படாமல் உள்ள கேமராக்களை கணக்கெடுத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதனால், நகரில் முக்கிய பிரச்னையாக உள்ள திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.
போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், திருவிழா காலங்களில் மக்களும் பாதுகாப்பாக நகருக்குள் வலம் வர முடியும்.
இது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.