UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:27 PM

திருப்பூர்: புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் கனகவல்லி, பூமிதேவி சமேத வீரராகவர் நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு, பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய வீரராகவர், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நெல்லிக்கனி, துளசி மாலை சாற்றி வழிபட்டனர். துளசி, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் காலை, மாலை என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அருகே பெருமாள் தாசர்கள் சங்கு, சேகண்டி முழங்க மயார் பூஜை நடத்தினர். பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகளை தலைவாழை இலையில் சமர்ப்பித்து வழிபட்டனர்.
ராயபுரம் பாண்டுரங்கன் கோவில், தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், கருலூர் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள் கோவில், அவிநாசி காரணப்பெருமாள் கோவில், ஆண்டிபாளையம் குளக்கரை வேணுகோபாலசுவாமி, வரதராஜர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பாண்டியன் கொண்டை கிரீட அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய, ஸ்ரீவீரராகவர்.
முத்தங்கி அலங்காரத்தில் திருமுருகன்பூண்டி, கரிவரதராஜப் பெருமாள்.
