/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை காக்க 'வளைந்த' சுற்றுச்சுவர்
/
பசுமை காக்க 'வளைந்த' சுற்றுச்சுவர்
ADDED : ஆக 02, 2025 11:20 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பகுதியில் இருந்த வேப்ப மரத்தை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது அனைவர் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை நடவும், நட்டு வளர்ந்துள்ள பழமையான மரங்களை பாதுகாக்கவும் அரசு, பசுமை அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பல வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், குடியிருப்பு பகுதி, ரோடு போன்ற இடங்களில் யோசிக்காமல் பழமையான மரங்களை வெட்டி சாய்க்கும் கொடுமையும் அடிக்கடி நடக்கிறது. சமீப காலமாக இந்த மரக்'கொலை'கள், திருப்பூரில் பல இடங்களில் பரவலாக நடக்கிறது.
இந்நிலையில், அனைவருக்கும் நல்ல உதாரணமாக மாநகர போலீசாரின் செயல்பாடு நடந்துள்ளது. கடந்தாண்டு, அவிநாசி ரோடு, குமார் நகரில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறக்கப்பட்டு இயங்க துவங்கியது. அடுத்தடுத்து வளாகத்தில் உள்ள சிறுசிறு பணிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றாக, சுற்றுச்சுவர் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
சுவர் கட்டும் பாதையில் வேப்ப மரம் ஒன்று நன்றாக வளர்ந்த நிலையில் இருந்தது. சுவருக்காக மறம் அகற்றப்படும் என்று பலரும் நினைத்து இருந்த நிலையில், அந்த மரத்துக்கு எவ்வித சேதமும், பாதிப்பும் ஏற்படாமல், மரத்தை பாதுகாத்து தற்போது சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
மரம் இருக்கின்ற, அந்த குறிப்பிட்ட பகுதியில், இடம் விட்டு, சுவரை கட்டியுள்ளனர். மாநகர பசுமைக்கான போலீசாரின் இந்த நல்லதொரு முன்னெடுப்பு, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.