/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் சுங்கத்துறை உதவி மையம் அமைகிறது
/
திருப்பூரில் சுங்கத்துறை உதவி மையம் அமைகிறது
ADDED : அக் 19, 2024 11:58 PM

திருப்பூர்: ''நிலுவை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் செட்டிபாளையத்தில் சுங்கத்துறை உதவி மையம் அமைக்கப்படும்,'' என, சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன் பேசினார்.
சுங்கத்துறை புதிய நடைமுறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலத்தில் நடந்தது.
ஏற்றுமதியாளர் தரப்பில் கூறுகையில், ''வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரக போர்ட்டலில், பதிவேற்றம் செய்யப்படும் தகவல், வெளிநாட்டு வர்த்தக பிரிவு உள்ளிட்ட, பிற அரசுத்துறை போர்ட்டல்களில், உடனுக்குடன் பதிவேற்றம் ஆக வேண்டும். ஆனால், பதிவேற்றம் ஆவதில்லை.
ஏற்றுமதியாளர் கணக்கில், இருப்புத்தொகை விவரம் தவறுதலாக பதிவாகிறது; தவறாக 'டிமாண்ட் நோட்டீஸ்' அனுப்பி வைக்கப்படுகிறது; இத்தகைய தொழில்நுட்ப குளறு படிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்,'' என்று தெரிவிக்கப்பட்டது.
சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன் பேசுகையில், ''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, நேரடியாகவோ, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வாயிலாகவோ, எங்கள் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தில், ஏற்றுமதி வாயிலாக அன்னிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் ஏற்று மதியாளர்களுக்கு சுங்கத்துறை தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.
நீண்ட காலமாக, நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் செட்டிபாளையத்தில் உள்ள மையத்தில், ஒரு கண் காணிப்பாளர் மற்றும் ஒரு ஆய்வாளருடன், உதவி மையம் அமைக்கப்படும்,'' என்றார்.
ஏற்றுமதியாளர் கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு மாதமும், முதல் திங்கட்கிழமை ஏற்றுமதியாளர் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று தலைமை கமிஷனர் உறுதி அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் விஜய் வேல்கிருஷ்ணா, துணை கமிஷனர் (திருப்பூர்) நமசிவாயம் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, நேரடியாகவோ, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வாயிலாகவோ, எங்கள் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.