/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தினசரி குடிநீர் பற்றாக்குறை 20 லட்ச ம் லிட்டர்!: தவிக்கிறது திருமுருகன்பூண்டி
/
தினசரி குடிநீர் பற்றாக்குறை 20 லட்ச ம் லிட்டர்!: தவிக்கிறது திருமுருகன்பூண்டி
தினசரி குடிநீர் பற்றாக்குறை 20 லட்ச ம் லிட்டர்!: தவிக்கிறது திருமுருகன்பூண்டி
தினசரி குடிநீர் பற்றாக்குறை 20 லட்ச ம் லிட்டர்!: தவிக்கிறது திருமுருகன்பூண்டி
ADDED : பிப் 12, 2026 05:04 AM

திருப்பூர்: 'திருமுருகன்பூண்டி நகராட்சியில், தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப, தினசரி, 20 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையாக இருப்பதால், இரண்டாவது குடிநீர் திட்டம் வாயிலாக கூடுதல் நீர் வினியோகிக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
முதல் நிலை அந்தஸ்து பெற்ற திருமுருகன்பூண்டி நகராட்சியில், கடந்த, 2011 கணக்கெடுப்புப்படி, மக்கள் தொகை, 31 ஆயிரத்து 528 பேர். கடந்த, 2023ல், மக்கள் தொகை, 36 ஆயிரத்து 826. இது, ஆவணத்தில் உள்ள கணக்கு தான் என்ற போதிலும், தற்போதைய நிலையில், 14 ஆயிரத்து 558 குடியிருப்புகள் உள்ளன; 58 ஆயிரத்து 212 பேர் வசிக்கின்றனர் என்கிறது நகராட்சி நிர்வாகம்.
திட்டம் இல்லை நகராட்சிக்கென பிரத்யேகமாக குடிநீர் திட்டம் எதுவும் இல்லை; பவானி ஆற்றுநீரை மையமாக கொண்ட, திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ், தினமும், 30 லட்சம் லிட்டர் நீரும், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக குடிநீர் திட்டம் மூலம், 10 லட்சம் என, தினசரி, 40 லட்சம் லிட்டர் நீர் பெறப்படுகிறது.
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:தினசரி, ஒருவருக்கு, 90 லிட்டர் நீர் வினியோகிக்கப்பட வேண்டும்; இதன்படி 50 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. நீர் கசிவுகள் மற்றும் நீர் இழப்புகள் சேர்த்து, தோராயமாக தினசரி, 60 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையாக உள்ளது. தற்போது, 20 லட்சம் லிட்டர் நீர் பற்றாக்குறையாக இருப்பதால், நகரவாசிகளுக்கு, 5 நாளுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்க முடிகிறது.
தொட்டிகள் தயார் திருப்பூர், இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான நீரேற்ற குழாயிலிருந்து, திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு நீர் திறந்துவிட, எம்.ஜி.ஆர். நகர், நகராட்சி அலுவலக கட்டடம், அம்மாபாளையம் பிரிவு ரோடு மற்றும் ராமகிருஷ்ணா பள்ளி அருகில் என, 4 இடங்களில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. தற்போது, 6வது மாநில நிதிக்குழு திட்டத்தில், பாலாஜி நகர், துரைசாமி நகர் என, இரு இடங்களில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
மாநகராட்சி 2வது திட்டம் சீரான வினியோகத்தை கருத்தில் கொண்டு, அரசின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், சபரி நகர் மற்றும் விஜிவி கார்டன் பகுதியில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர்தேக்க தொட்டியும் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.திருப்பூர் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து, திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு கூடுதலாக, 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமாரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு, திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் கூடுதலாக, 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெறுவதற்கு, திருப்பூர் மாநகராட்சியிடம் இருந்து கருத்துரு பெற்று, குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக்கோட்ட நிர்வாக பொறியாளருக்கு அனுப்பி வைத்தால், தலைமை அலுவலகத்தின் உரிய அனுமதி பெற்று, குடிநீர் வழங்க ஆவன செய்யப்படும் என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
'திருப்பூர் மாநகராட்சிக்கு நான்காவது குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், இரண்டாவது குடிநீர் திட்டத்தில் கூடுதல் நீர் வினியோகம் செய்யப்படும்' என, ஏற்கனவே, மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்திருந்தது. தற்போது, மாநகராட்சிக்கான நான்காவது குடிநீர் திட்டப்பணியும் நிறைவு பெற்று விட்டது.
எனவே, திருமுருகன்பூண்டிக்கான கூடுதல் நீர் வழங்குவதற்கான ஒப்புதலை வழங்க வேண்டும் என, மாநகராட்சியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
நீர் வினியோகிக்க தாமதம் ஏற்படுவதால், அதற்கென கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் பயனற்று, காட்சிப் பொருளாக உள்ளன; அதில் நீர் நிரப்பாவிட்டால், தொட்டியில் விரிசல், உடைப்பும் கூட ஏற்பட்டு விடும். நீர் வினியோகத்திற்கான கட்டமைப்பு உரிய முறையில் அமைக்கப்பட்டிருப்பினும், நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

