ADDED : பிப் 12, 2026 05:03 AM

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு அகலப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை திருப்பூருடன் இணைக்கும் பிரதான சாலையாக ஊத்துக்குளி ரோடு உள்ளது. ஊத்துக்குளி முதல் திருப்பூர் வரையிலான, 16.5 கி.மீ., சாலையில், நான்கு கி.மீ., அகலப்படுத்தப்பட்டுள்ளது; மீதமுள்ள துாரத்தை அகலப்படுத்த கடந்தாண்டு திட்டமிடப்பட்டது.குளத்துப்பாளையம் முதல் பெட்டிகடை ஸ்டாப் வரை, 5.5 கி.மீ., துார சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற, 25 கோடி ரூபாய் முதல்கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. டிச. மாதம் அளவீடு பணி முடிந்த நிலையில், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கூலிபாளையம் நால்ரோடு முதல் எஸ்.பெரியபாளையம் வரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடங்களில், மண் கொட்டி, அணுகு சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. தாழ்வான பகுதியில், மழைநீர் வழிந்தோட ஏதுவாக, மழைநீர் வடிகால் கட்டும் பணியும் துவங்கியுள்ளது.
ஊத்துக்குளி ரயில்வே பாலம் துவங்கி, குளத்துப்பாளையம் ஸ்டாப் வரை சாலையின் வலதுபுறம் முழுமையாக தோண்டப்பட்டு, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டு ள்ளது. வாகனங்கள் இடதுபுறம் மட்டுமே சென்று வர முடியும் என்பதால், இரவு, அதிகாலை நேரத்தில் வாகனத்தை கவனமுடன் இயக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

