/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழையால் நிரம்பிய தடுப்பணைகள்
/
பருவமழையால் நிரம்பிய தடுப்பணைகள்
ADDED : டிச 23, 2024 10:09 PM
உடுமலை; மழை நீர் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட, சிறு தடுப்பணைகளில், மழை நீர் தேங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், நுாற்றுக்கணக்கான மழை நீர் ஓடைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில், இந்த ஓடைகளில் நீர்வரத்து இருக்கும்.
ஆனால், குறுகிய நாட்களில், தண்ணீர் வறண்டு விடும். உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால், இந்த சிறு ஓடைகளின் குறுக்கே, தடுப்பணை, கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், சிறு ஓடைகளில், 'போல்டர்' எனப்படும் கல் தடுப்பணைகள் மற்றும் சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சியிலும், இவ்வாறு, ஐந்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள், கட்டி முடிக்கப்பட்டது.
போதிய மழை இல்லாததால், இந்த தடுப்பணைகள் நிரம்பாமல் இருந்தன. வடகிழக்கு பருவமழை, உடுமலை பகுதியில், நன்றாக பெய்து, அனைத்து ஓடைகளிலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தடுப்பணைகளில், தண்ணீர் தேங்கியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அடுத்தடுத்து, ஓடைகளில், தண்ணீர் தேக்கி நிறுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், பல இடங்களில், தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகளால், தடுப்பணைகளில், தண்ணீர் தேங்காமல், வீணாகி விட்டது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அதிகாரிகள் வாயிலாக, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.