/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைக்கு மேல் ஆபத்து! எங்கு நோக்கினும் விளம்பரப்பலகைகள்; அலட்சியத்துடன் அதிகாரிகள்
/
தலைக்கு மேல் ஆபத்து! எங்கு நோக்கினும் விளம்பரப்பலகைகள்; அலட்சியத்துடன் அதிகாரிகள்
தலைக்கு மேல் ஆபத்து! எங்கு நோக்கினும் விளம்பரப்பலகைகள்; அலட்சியத்துடன் அதிகாரிகள்
தலைக்கு மேல் ஆபத்து! எங்கு நோக்கினும் விளம்பரப்பலகைகள்; அலட்சியத்துடன் அதிகாரிகள்
ADDED : ஆக 13, 2025 10:44 PM

திருப்பூர்: திருப்பூரில், விதிமுறைகளை மீறி, போக்குவரத்து சிக்னல்களிலும், ரோட்டிலும் வைக்கப்படும் ராட்சத பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளால், விபத்து அபாயம் தொடர்கிறது. இவற்றை அகற்றாமல், அதிகாரிகளின் அலட்சியம் தொடர்கிறது.
சென்னையில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில், டூவீலரில் சென்ற சுபஸ்ரீ, 23, என்பவர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். கடந்த 2019ல் நடந்த துயர சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளையோ, நீதிமன்றங்களின் உத்தரவுகளையோ யாரும் பொருட்படுத்துவதில்லை. போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகளில், விளம்பர போர்டுகள் வைப்பது தொடர்கிறது.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, 'அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில், கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
திருப்பூரில் சகஜம்
பின்னலாடைத் தொழிலாளர் மிகுந்த திருப்பூரில், நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படுகிறது. ஆபத்தை உணராமல், அரசியல் கட்சியினரும், தனியார் நிறுவனத்தினரும், விதிமீறி, ரோட்டோரங்களில் விதிமுறைகளை மீறி, பெரிய அளவிலான விளம்பர பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை வைப்பது சகஜமாகிவிட்டது.
அரசியல் கட்சியினர், மாநாடுகள் நடத்தும்போது, தங்கள் தலைவர்களை வாழ்த்தியும்; நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும்வகையிலும், ரோட்டில் அலங்கார வளைவுகள், மெகா பேனர்களை வைக்கின்றனர். தனியார் நிகழ்ச்சிகள் நடத்தும்போதும், ரோட்டோர மின்கம்பங்கள், கேபிள் கம்பங்களில் பெரிய அளவிலான பேனர்கள் கட்டப்படுகின்றன.
வர்த்தக நிறுவனங்களும், மக்கள் பார்வையில் படும்வகையில், ரோட்டோர தனியார் கட்டடங்களில், இரும்பு, தகரத்தாலான பிரமாண்டமான விளம்பர பேனர்களை நிரந்தரமாக வைத்துள்ளன.
விபத்துக்கு அடிகோலும்
இதற்காக உள்ளாட்சி அமைப்புகளிடமோ, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் என எந்த துறையிடம் இருந்தும் அனுமதி பெறப்படுவதில்லை.
திருப்பூரில், மங்கலம் ரோடு ஜம்மனை ஓடை அருகே, ரயில் வே ஸ்டேஷன் பஸ்ஸ்டாப் அருகில், விதிகளை மீறி ரோட்டில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோட்டோரத்தை ஆக்கிரமித்தும், ரோடு சந்திப்பு பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், மற்ற வாகனங்களுக்கு வழிவிட இடமின்றியும், விபத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஊசலாடும் பேனர்கள்
திருப்பூர் நகர பகுதிகளில், போலீசார் எப்போதும் பணியில் ஈடுபடும், போக்குவரத்து சிக்னல்களிலேயே, விளம்பர பேனர்கள் தொங்கவிடப்படுகிறது. காற்றில் அங்கும் இங்கும் ஊசலாடும் இந்த விளம்பர பேனர்கள், வாகன ஓட்டிகளுக்கு தலைக்கு மேல் ஆபத்து காத்திருக்கிறது என மிரட்டல் விடுக்கின்றன.
திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், உஷா தியேட்டர் சிக்னல், பலவஞ்சிபாளையம் பிரிவு; பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் சிக்னல்; குமரன் ரோட்டில் வளர்மதி சிக்னல்; ஊத்துக்குளி ரோட்டில் போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள சிக்னல்களில், தனியார் நிறுவனங்களின், தகரத்தாலான விளம்பர பேனர்கள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
வசூல் 'ரகசியம்'
பலத்த காற்று மற்றும் மழைக்காலங்களில், இந்த பேனர்கள் அறுந்து விழுந்து உயிர்பலி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனாலும், எந்த அரசு துறையினரும் இதை கண்டுகொள்வதில்லை. சிக்னல்களில் பேனர் தொங்கவிடுவதற்கு, எந்த அரசு துறை அனுமதி வழங்கியது; பேனர் வைப்பதற்காக நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, அந்த தொகை யார் யாருடைய பாக்கெட்டை நிரப்பியது என்பதெல்லாம் 'ரகசியம்'தான்.
மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, போலீசார் என எந்த துறையினரும், விதிமீறி, சிக்னல்களில் தொங்கவிடப்படும் விளம்பர பேனர்களையோ, ரோட்டில் வைக்கப்படும் பேனர்களையோ கண்டுகொள்வதில்லை.
---
திருப்பூரில் விதிமுறை மீறி, ராட்சத விளம்பர பேனர்கள் மற்றும் பலகைகள், நீக்கமற நிறைந்துள்ளன.
மங்கலம் ரோடு, ஜம்மனை பள்ளம்
ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்
பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ஸ்டாப்.
குமார் நகர்
காந்தி நகர்.
புஷ்பா ரவுண்டானா.