/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபாய வளைவுகள் மேம்படுத்தல ஆனைமலை ரோட்டில் சிக்கல்
/
அபாய வளைவுகள் மேம்படுத்தல ஆனைமலை ரோட்டில் சிக்கல்
ADDED : ஏப் 25, 2025 11:34 PM
உடுமலை: ஆனைமலை ரோட்டிலுள்ள அபாய வளைவுகளை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் பகுதியில் பிரிந்து, ஆனைமலை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில், பாப்பனுாத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
தென் மாவட்டங்களிலிருந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அதிகளவு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகளவில் காணப்படும். இந்த ரோட்டில், அபாய வளைவு பகுதிகள் அதிகளவு உள்ளன.
முக்கோணத்திலிருந்து வாளவாடி செல்லும் ரோடு பிரியும் பகுதி, ரயில்வே கேட் அருகில், சாளையூரிலிருந்து உடுக்கம்பாளையம் ரோடு பிரியும் பகுதி, அதே பகுதியில், மழை நீர் ஓடை குறுக்கிடும் பகுதி, கொடுங்கியம் என ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன.
ரோடு குறுகலாக இருப்பதால், இந்த வளைவுகளில், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது, பிற வாகனங்கள், விலகிச்செல்ல முடிவதில்லை.
விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல முறை புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
மேலும்இவ்வழித்தடத்தில், ஆனைமலை, வேட்டைகாரன்புதுார், தேவனுார்புதுார் உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா வாகனங்கள் உட்பட போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோட்டை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.