/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெண்டை விலை சரிவு; விவசாயிகள் கவலை
/
வெண்டை விலை சரிவு; விவசாயிகள் கவலை
ADDED : ஜூலை 17, 2025 09:39 PM
உடுமலை; நோய்த்தாக்குதலால், விளைச்சல் பாதித்துள்ள நிலையில், விலையும் குறைந்து வருவதால், வெண்டை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை மலையாண்டிபட்டணம், குரல்குட்டை, கண்ணமநாயக்கனுார், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு, பரவலாக வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில், பல்வேறு காரணங்களால், விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருகிறது.
கடந்த வாரம் வரை, கிலோவுக்கு, 50 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது. கடந்த சில நாட்களாக விலை கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
வெண்டை சாகுபடியில், நடவு செய்த, 45 நாட்களில், காய்கள் அறுவடைக்கு வருகிறது. இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மீண்டும் அறுவடை செய்யலாம்.
இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால், குறிப்பிட்ட இடைவெளியில், வெண்டை அறுவடை செய்ய முடியவில்லை; இதனால், காய்கள் முற்றி, போதிய விலை கிடைப்பதில்லை. நடைமுறை சிக்கலால், பெரும்பாலான விவசாயிகள் இந்த சாகுபடியை கைவிட்டு வருகின்றனர்.
மேலும், பகலில் அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால், நோய்த்தாக்குதலும் ஏற்பட்டு, விளைச்சல் குறைந்துள்ளது. விலை குறைந்து வருவது கவலையளிக்கிறது.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.