/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எழுத்தறிவு திட்டத்தில் குறையும் ஆர்வம் :மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
/
எழுத்தறிவு திட்டத்தில் குறையும் ஆர்வம் :மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
எழுத்தறிவு திட்டத்தில் குறையும் ஆர்வம் :மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
எழுத்தறிவு திட்டத்தில் குறையும் ஆர்வம் :மாற்றம் ஏற்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : பிப் 27, 2024 11:42 PM
உடுமலை:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், பயிற்சி அளிப்பதற்கு தன்னார்வலர்கள் நியமிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது.
கல்வியறிவு கிடைக்கப்பெறாத முதியவர்களுக்கு, அடிப்படை கற்றல் மற்றும் எழுதுதல் திறன்கள், அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சி வழங்குவதற்கு, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள், ஜே.ஆர்.சி., என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் உள்ள மாணவர்கள், தன்னார்வல பெண்கள் உள்ளிட்டோரை தன்னார்வலராக நியமிக்க வேண்டும்.
திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு வட்டாரத்திலும், ஒரு பள்ளிக்கு ஒரு தன்னார்வலர் வீதம், அப்பகுதி மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அரசுப்பள்ளிகளுக்கு அருகிலுள்ள, 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களின் பட்டியல், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வேலை உறுதி திட்டத்தில் பராமரிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது.
அவர்களுக்கான பொதுவான மையம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள், சுயதொழில் செய்வதற்கான பயிற்சிகள், தபால் மற்றும் வங்கித்துறைகளிலிருந்து அலுவலர்களை அழைத்து வந்து பயிற்சி அளிப்பது.
அஞ்சலக சேமிப்பு, போலீசார், வக்கீல்களைக்கொண்டு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மருத்துவர்கள் வாயிலாக உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதும், தன்னார்வலர்களின் பணியாக உள்ளது.
தன்னார்வலர்களுக்கு இதற்கென ஊக்கத்தொகை என எதுவும் வழங்கப்படுவதில்லை. விருப்பமுள்ளவர்கள் இப்பணியை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஆனால் பெரும்பான்மையான கிராமங்களில், தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பது சவாலாக இருப்பதாக, பள்ளி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
மேலும், இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை நபர்களுக்கு கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டி உள்ளது.
இதனால் விருப்பமில்லாத மற்றும் மிக வயது முதிர்ந்தவர்களையும், கட்டாய நிலையில் பயிற்சி அளிக்கும் நிலைக்கு, பள்ளி நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தன்னார்வலர்கள் பல்வேறு துறைகளுக்கும் சென்று, அங்குள்ளவர்களை பயிற்சி தர அழைத்துவர வேண்டும். ஆனால் அதற்கான தொகையும், அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
மேலும் கிராம மக்கள் பலரும் பணி முடிந்து பின், பயிற்சி வருவதற்கு விருப்பம் காட்டுவதில்லை. அவர்களுக்கான பயிற்சி அளிப்பதிலும், பயிற்சியாளர்கள் நியமிப்பதிலும் கல்வித்துறை மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

