/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிலையான விலையின்றி குறையும் கரும்பு சாகுபடி
/
நிலையான விலையின்றி குறையும் கரும்பு சாகுபடி
ADDED : செப் 25, 2024 08:29 PM
உடுமலை : உடுமலை ஏழு குள பாசனப்பகுதியில், பிரதான சாகுபடியாக கரும்பு இருந்தது. உற்பத்தியாகும் கரும்பை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்ல உற்பத்திக்கும் பயன்படுத்தி வந்தனர்.
பல்வேறு காரணங்களால், சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்குவது குறைந்து, வெல்ல உற்பத்திக்கு விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கினர். இதற்காக விளைநிலங்களில், ஆலை அமைத்து, வெல்லம் உற்பத்தி செய்தனர். கேரள ஓணம் சீசனில், நல்ல விலையும் கிடைத்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, சீசனிலும், கரும்பு மற்றும் வெல்லத்துக்கு நிலையான விலை கிடைப்பதில்லை. பருவமழை போதியளவு பெய்யாமல், ஏற்பட்ட வறட்சியால், பலர், காய்கறி சாகுபடிக்கு மாறினர்.
இவ்வாறு, பல ஆயிரம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு, தற்போது வெகுவாக குறைந்து விட்டது.
விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடியில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து, போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்தோம்.
மேலும், சீசன் சமயங்களில், செயற்கையாக விலை வீழ்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. அறுவடைக்காக ஓராண்டு பராமரித்து, அதற்குரிய சாகுபடி செலவு கூட கிடைப்பதில்லை. கேரளாவுக்கும், வெல்லம் செல்வது குறைந்து விட்டது.
சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கான மானியங்களை வழங்க வேண்டும். சீசன் சமயங்களில், கரும்பு மற்றும் வெல்லத்துக்கு ஆதார விலையை அரசு அறிவித்தால், நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.