/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
/
இழப்பீடு வழங்குவதில் தொய்வு; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 25, 2025 08:47 PM
- நமது நிருபர் -
'நாய்கள் தாக்கி பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்துவதில் தொய்வு தென்படுகிறது' என, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம், ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி மற்றும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை உள்ளிட்ட இடங்களில், கடந்த இரு ஆண்டாக, தெரு நாய்களால் ஆடு உள்ளிட்ட கால்நடைகள் கடிபட்டு காயமடைவது மற்றும் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் தொடர் போராட்டம் மற்றும் கோரிக்கையின் விளைவாக, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு, 37 ஆயிரத்து 500 ரூபாய், வெள்ளாடு, செம்மறியாடு ஒன்றுக்கு, 6,000 ரூபாய், கோழி ஒன்றுக்கு 200 ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், கால்நடைகளை இழந்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை என, விவசாயிகள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த, ஏப்., முதல் தேதியில் இருந்து இழப்பீடு கொடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ஏறத்தாழ, 77 லட்சம் ரூபாய்க்கு மேல், இழப்பீடு வழங்கப்பட வேண்டிய நிலையில், 14 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் இழப்பீடு கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிடும் போது, இழப்பீடு தொகை கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்ற பதிலை மட்டுமே கூறுகின்றனர். ஆடுகளை இழந்த அனைவருக்கும் விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.