/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையை அப்புறப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
/
மதுக்கடையை அப்புறப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுக்கடையை அப்புறப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
மதுக்கடையை அப்புறப்படுத்துங்க! பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 17, 2025 09:27 PM
உடுமலை : உடுமலை பார்க் ரோடு பகுதி திறந்த வெளி 'பார்' ஆக மாறி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
உடுமலை நகரில் அமைந்துள்ள அண்ணா பூங்கா பொதுமக்கள் பயன்பாடில்லாமல், பொலிவிழந்து உள்ளது. பூங்கா அமைந்துள்ள ரோட்டில், நகராட்சி நடுநிலைப்பள்ளி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம், மருத்துவமனை, உணவகங்கள், குடியிருப்புகளும் உள்ளன.
பூங்கா அருகில், ராஜேந்திரா ரோட்டில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. உழவர் சந்தை, ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பிரதானமான இந்த ரோடு, பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடமாகவே உள்ளது.
இங்கு மதுக்கடை அமைந்துள்ளது பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாகவே உள்ளது. 'குடி'மகன்கள், மதுக்கடையிலிருந்து ரோட்டுக்கு வந்து தகராறு செய்வதும், வாகனங்கள் வந்து கொண்டிருக்கும் போது, இடையில் வருவதும், ஒதுங்கிச்செல்பவர்களையும் விபத்துக்குள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி வணிக வளாகங்களில் பெண் பணியாளர்களும் பலர் உள்ளனர். மாலை நேரங்களில் 'குடி'மகன்களின் அட்டகாசம் துவங்குவதால், பெண்கள் நிம்மதியில்லாமல் பணி செய்கின்றனர்.
மாலை நேரங்களில் அச்சத்துடனே மதுக்கடையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், இதனால், பூங்கா ரோடு முற்றிலுமாகவே திறந்த வெளி 'பார்' ஆக மாறியுள்ளது.
அவர்கள் அரைகுறை ஆடையுடன் பூங்கா வாசலில் கிடப்பது, அவ்வழியாக செல்வோரை முகம் சுழிக்க வைப்பதோடு, மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அருகில் உள்ள பள்ளி முன்புறமும், 'குடி'மகன்களின் இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது.
குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் வெளியில் தனியாக செல்ல அனுமதியளிக்க முடியாமல் பெற்றோர் வேதனையடைந்துள்ளனர்.
எனவே, இந்த மதுக்கடையை அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.