/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு
/
சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு
ADDED : நவ 14, 2024 04:58 AM

பொங்கலுார்: வேலம்பட்டி சுங்கச்சாவடியில், நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட கட்டடம் நேற்று அதிரடியாக இடித்து அகற்றப்பட்டது.
அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான, 31.8 கிலோமீட்டர் துார ரோடு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கு என். எச்., 381 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோட்டின் குறுக்கே பொங்கலுார் வேலம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது; சுங்கச்சாவடிக்குரிய எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்று கூறி வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தின.
நேற்று முன்தினம் சுங்கம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்படும் என்பது முடிவானது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை, 3:00 மணி அளவில் புல் டோசர் இயந்திரம் மூலம் சுங்கச்சாவடி ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கியது. ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்படுவதை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்பட்டாலும் சுங்கச்சாவடியமைக்கும் முடிவு கைவிடப்படாது என்பதால், சுங்கம் வசூலிப்பதை தடுக்க போராட்டம் நடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராகி வருகிறது.
மக்கள் வரிப்பணம் வீண்
கோர்ட் உத்தரவை அலட்சியப்படுத்திவிட்டு அதிகாரிகள் வேலம்பட்டியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் கட்டடம் இடிக்கப்பட்டது. அதிகாரிகள் விதிமுறை மீறி செயல்பட்டதால் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் அநியாயமாக வீணானது.

