sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆர்ப்பாட்டம்

/

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 12, 2024 11:47 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக இவர்களில் யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடையாள அட்டை பெற்றவர்களுக்கு வேலையும், சட்டப்படியான ஊதியமும் வழங்க கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வெள்ளகோவில் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் திருவேங்கடசாமி, தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

---

ரோட்டோர ஓடைகள் சீரமைப்பு

திருப்பூர், ஆக. 13-

ரோடுகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் ரோட்டோரங்களில் உள்ள ஓடை மற்றும் நீர் வழிப்பாதைகள் துார் வாரி சீரமைக்கப் பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தற்போது இந்த மழை பெய்து வருகிறது. இம்மழை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த மழையின் போது, ரோட்டோரம் உள்ள ஓடைகளில் மழை நீர் தடையின்றி செல்லும் வகையிலும், ரோட்டில் மழை நீர் சென்று பாயாத வகையிலும் பணி மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் ரோட்டில் மழை நீர் தேங்கி பெரும் அவதி நிலவும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து திருப்பூரில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டோர ஓடைகள், மழை நீர் வடிகால்கள் துார் வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் நகரப் பகுதி முதல் காங்கயம் வரையில் இந்த ரோட்டில் உள்ள சிறு ஓடைகள், பள்ளங்கள் கடந்து செல்லும் பாலங்கள், மழை நீர் வடிகால்களில் துார் வாரி சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

இவற்றில் நிரம்பியுள்ள மண் திட்டுகள், வளர்ந்து நிற்கும் செடி கொடிகள் அப்புறப் படுத்தும் பணி நடக்கிறது. இதில் நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் மும்முரமாக மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுபாலங்கள் மீது அமைந்துள்ள தடுப்பு சுவர்களிலும் வெள்ளையடிக்கும் பணியும் நடக்கிறது.

---

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர்

சோமனுார் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை நடக்கிறது.

செயற்பொறியாளர் சபரிராஜன் அறிக்கை: கோவை தெற்கு மின்பகிர்மான வட்டம், சோமனுார் மின் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், 14ம் தேதி (நாளை) காலை 11:00 மணிக்கு, சோமனுார் அலுவலகத்தில் நடக்க உள்ளது. மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைபாடுகளை தெரிவிக்கலாம்.

----

திருப்பூரில் மழை

திருப்பூர், ஆக. 13-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம், லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் மொத்தம் 367.80 மி.மீ., மழை பதிவாகி யுள்ளது.

அதிகபட்சமாக திருப்பூர் - அவிநாசி ரோட்டில் கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 74 மி.மீ., அளவுக்கு கன மழை பெய்துள்ளது. ஊத்துக்குளி தாலுகா அலுவலக பகுதியில் 5 மி.மீ., - திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 43; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 35; அவிநாசி தாலுகா அலுவலக பகுதியில் 33; திருப்பூர் - பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பகுதியில் 23; பல்லடம் தாலுகா அலுவலக பகுதியில் 20; தாராபுரம் தாலுகா அலுவலக பகுதியில் 19; அமராவதி அணைப்பகுதியில் 18 மில்லி மீட்டராக மிதமான மழை பதிவாகியுள்ளது.

தாராபுரம் உப்பாறு அணைப்பகுதியில் 11 மி.மீ., - காங்கயம் தாலுகா அலுவலக பகுதியில் 14; மடத்துக்குளம் தாலுகா அலுவலக பகுதியில் 10; உடுமலை தாலுகா அலுவலக பகுதிகளில் 7.20; வட்டமலைக்கரை ஓடையில் 3.60; வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலக பகுதியில் 3 மி.மீ.,க்கு லேசான மழையும்; திருமூர்த்தி அணை பகுதிகளில் 2 மி.மீ., க்கு மிக லேசான மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக, 18.39 மி.மீ., மழை பெய்துள்ளது.

----

10 கோடி வளர்ச்சி பணிகள்

காணொலி வாயிலாக முதல்வர் திறந்தார்

திருப்பூர், ஆக. 13-

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பள்ளி மேம்பாட்டு நிதியில், 4.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் கூட்டுறவு நிதி முகமை சார்பில், துணை சுகாதார மையங்கள், கூடுதல் மையங்கள் அமைத்தல் ஆகிய திட்டத்தில் 3 மையங்கள் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் 2.9 கோடி ரூபாய் மதிப்பில் கே.வி.ஆர்., நகரில் ஜம்மனை பள்ளத்தின் குறுக்கில், உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு பெற்றுள்ள இந்த கட்டடங்கள் நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

சென்னை தலைமை செயலகத்திலிருந்து கணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இவற்றைத் திறந்துவைத்தார். இடுவம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த இதற்கான விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றியும் முக்கிய பிரமுகர்கள் திறந்து வைத்தனர்.

-----

மதுக்கூடத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஆக. 13-

அவிநாசி, சேவூர் ரோடு, சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் கடந்த மாதம் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கூடம் திறக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பேரூராட்சியில் அவிநாசியில் புதிதாக டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றம், கேளிக்கை விடுதி என எந்தப் பெயரிலும் மதுக்கூடம் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

மக்கள் போராட்டத்தை அறிவித்ததால், வரும், 15ம் தேதி வரை மனமகிழ் மன்றத்தை இடமாற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்படுவதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று சேவூர் ரோடு, செங்காடு திடலில், மனமகிழ் மன்றத்தை உடனடியாக இடம் மாற்ற செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., தவிர மற்ற கட்சி நிர்வாகிகள், கிராமிய மக்கள் இயக்கம், களம், நல்லது நண்பர்கள், துளிர்கள், ஈரம் ஆகிய அறக்கட்டளைகள், பொறியாளர் சங்கம், ரியல் எஸ்டேட் சங்கம், அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் என அனைத்து தரப்பினர் சார்பில், நிர் வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மனமகிழ் மன்றத்தை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வரும் 15ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யாவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

----

'போதை இல்லா தமிழகம்'

மாணவர்கள் உறுதியேற்பு

திருப்பூர், ஆக. 13-

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லுாரிகளில், 'போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.

திருப்பூர் மாவட்ட போலீசார் சார்பில், அனைத்து ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியும், ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடந்தது. அவ்வகையில், இரண்டு விழிப்புணர்வு ஊர்வலங்கள், 69 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அவிநாசி அரசு கல்லுாரியில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல்துறை, கல்லுாரியின் போதை தடுப்பு பிரிவு இணைந்து நடத்தின.

முதல்வர் நளதம் வரவேற்றார். எஸ்.பி., அபிஷேக் குப்தா தலைமை வகித்தார். அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலை வகித்தார்.

எஸ்.பி., பேசுகையில், ''போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவரால் அவரது குடும்பம், அவரை சுற்றியுள்ள நண்பர்கள் வட்டம் என பலரும் பாதிக்கப்படுவர். போதைப்பழக்கத்தை பழகியுள்ள சக நண்பர்களை அடையாளம் கண்டு உரிய முறையில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர வேண்டிய கடமை உண்மையான நட்புக்கு உள்ளது'' என்றார்.

அனைவரும் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் அடங்கிய உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., சர்வேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

* திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கல்லுாரி மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்ட போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

* திருப்பூர் குமரன் கல்லுாரியில் நுண்ணுயிரியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், போதை பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி, மதுவிலக்கு பிரிவு உதவி எஸ்.ஐ.,க்கள் வனஜா, கிரிஜா, ரமா அனிதா ஆகியோர் பங்கேற்றனர்.

* திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துணை கமிஷனர் கிரீஸ் அசோக் யாதவ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசியும், உறுதிமொழியும் எடுத்தனர்.

---

கனிம வள கொள்ளைக்கு எதிராக விவசாயிகள் காட்டம்

பல்லடம், ஆக. 13--

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் விவசாயிகள் பெயரில் மண் கடத்தல் மாபியாக்கள், கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர்; கனிம வளக்கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி, கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மண் கடத்தல் புகார்கள் எழுந்து வருகின்றன. வருவாய்த் துறையினர் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயன்படுத்திய வாகனங் களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

மண் கொள்ளைக்கு துணை போன வி.ஏ.ஓ., ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிய வேண்டும்'' என்றார்.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் ஜீவா, 'தற்போது மண் அள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை; புகார்கள், குற்றச்சாட்டுகள் குறித்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

---

ரயில் கோவை செல்லாது

திருப்பூர், ஆக. 13-

'திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர், வரும், 16ம் தேதி முதல் பத்து நாட்களுக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது. இருகூர் - போத்தனுார் மாற்று வழித்தடத்தில் இயங்கும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணி, வரும், 16ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருச்சியில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் (எண்:16843) ஆக., 16 முதல், 19 வரை நான்கு நாட்கள், 23 முதல், 26 வரை நான்கு நாட்கள், ஆக., 30 முதல், 31 வரை இரண்டு நாட்கள் என மொத்தம், பத்து நாட்கள் ரயில் இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் பாலக்காடு செல்லும்.

இந்த நாட்களில், வழக்கமாக வழித்தடமான, சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் வழியாக பயணிக்காது என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

----

பசுமை காக்க என்ன தயக்கம்?

திருப்பூர், ஆக. 13-

திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரை சேர்ந்தவர் தனபால். 53. கடந்த சில நாட்கள் முன், இவரது வீட்டுக்கு வெளியே மரம் வளர்த்து வந்தார். அந்த மரத்தை வீட்டுக்கு எதிரே வசிக்கும் சிலர் வெட்டி சாய்த்தனர். இதை தனபால் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த மரத்தை வெட்ட ஆட்களை அனுப்பிய, அ.தி.மு.க., பிரமுகரான குமார் உள்ளிட்ட சிலர், தனபாலுடன் வாக்குவாதம் செய்து, அவரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

பசுமை ஆர்வலர்கள் தனபால் மீது நடந்த தாக்குதலை கண்டித்து திரண்டனர். நல்லுார் போலீசில் புகார் தெரிவித்தனர். விசாரித்த போலீசார், குமார், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குமாரை போலீசார் கைது செய்தனர். உடனடியாக ஸ்டேஷன் ஜாமினில் விடப்பட்டார்.

கண்துடைப்பு நடவடிக்கை?

பசுமை ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்கு பின்புதான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் கட்சிகள் மத்தியில் அழுத்தம் ஏற்படவே, தொடர்ந்து வருவாய்துறையினர் மவுனமாக உள்ளனர். இதனால், மரம் வெட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பொது இடங்களில் உள்ள மரத்தை வெட்டுவது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் என்று தெரிந்தும், வருவாய்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவலை மட்டும் அளித்து விட்டு, வெட்டியவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். கலெக்டர் தலையிட்டால் மட்டுமே, மீண்டும் இதுபோன்று நிகழ்வு அரங்கேறாது என்று பசுமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

----

சாலைப்பணியாளர்கள் பேரவைக்கூட்டம்

அவிநாசி, ஆக. 13-

அவிநாசியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், 6வது கோட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது.

கோட்டத் தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சிங்கராயன் துவக்க உரையாற்றினார். கோட்ட செயலாளர் ராமன் வேலை அறிக்கை, கோட்ட பொருளாளர் அண்ணாதுரை வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

சாலை பணியாளர் களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை பெற்றிடவும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால், 3,500 சாலை பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

---------

பிரச்னைக்கு தீர்வு: மக்கள் நம்பிக்கை

திருப்பூர்:பிரச்னைகள் இல்லாத இடம் ஏதும் இல்லை. தீர்வு கிடைத்துவிட்டால், பிரச்னைகள் குறித்த கவலை மாயமாகிவிடும். தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான், திங்கள்தோறும், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்களை ஆர்வத்துடன் நகர வைக்கிறது.

'கலெக்டர் சாரையே பார்த்து மனு கொடுத்துட்டு வாரேன்...' என்று, நண்பரிடமோ, பக்கத்து வீட்டினரிடமோ... ஏன் ஊர் முழுக்கவோ கூறிவிட்டுப் புறப்படுவோர் பலர். நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மட்டும் 492. இதில், எவ்வளவு மனுக்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கப்போகிறதோ, தெரியாது. அதிகாரிகள் சொல்லும் கணக்கு வேறுவிதமாகக் கூட இருக்கலாம். ஆனாலும், இன்னும் மனுக்களுக்கென்று ஓர் உயிர்ப்புத்தன்மை இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில், உச்சநீதிமன்றத்தின் கதவுகளைக் கூடத் தட்டி, இவை நியாயம் கேட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன. இதுதானே, ஜனநாயகம்!

இதோ, நேற்று பெறப்பட்ட சில மனுக்கள், அதிகாரிகள் பார்வைக்கும், வாசகர் பார்வைக்கும்...

காமராஜர் சிலைக்கு எதிரில் மதுக்கடை

குன்னத்துார் பேரூராட்சி, 10வது வார்டில், பஸ் ஸ்டாண்ட் அருகே மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் செயல்படும் இரண்டு மதுக்கடைகளால் மக்கள் தினந்தோறும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மனமகிழ் மன்றம் அமைந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும். குடியிருப்பு, கோவில், பள்ளி அமைந்துள்ளதால், தனியார் மதுக்கடை அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது. ஏற்கனவே, காமராஜர் சிலைக்கு நேர் எதிராக, மதுக்கடை செயல்படுகிறது. மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யவேண்டும்.

- பா.ஜ., ஊத்துக்குளி வடக்கு மண்டல தலைவர் சிவகுமார் தலைமையில் வந்த பொதுமக்கள்.

வீசும் துர்நாற்றம்; பெருகிய ஈக்கள்

தாராபுரம் தாலுகா, மானுார்பாளையம் கிராமம், உடையார்பாளையம் குடியிருப்பு அமைந்துள்ளது. தொட்டியன் துறையில் இயங்கும் கோழிப்பண்ணையிலிருந்து, கோழிக்கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து, உடையார்பாளையத்தில் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் பெருகி, மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டாதவாறு, கோழிப்பண்ணை நிர்வாகத்துக்கு கடிவாளம் போடவேண்டும். உடையார்பாளையம் ஊரில், 500 குடும்பங்கள் வசதிக்கிறோம். எங்கள் பயன்பாட்டில் உள்ள மயானத்தை, சூரிய ஒளி மின் உற்பத்தி பாதையாக மாற்றி, தனியார் ஆக்கிரமித்துவருகிறார். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மயானத்தை மீட்டுத்தரவேண்டும்.

- குண்டடம் ஒன்றியம், சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் பொதுமக்கள்.

ஆசிரியர்கள் போதவில்லையே!

திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமி அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள். - கொ.ம.தே.க.,

குடிபோதையால் எத்தனையோ குடும்பங்கள் நிர்க்கதியாகின்றன. இரண்டு மகள்களுடன் நேற்று குறைகேட்பு கூட்டத்துக்கு வந்த ஒரு பெண்மணி, மனு அளித்த பின், கண்ணீர் மல்க கூறியதாவது:

கணவர், பனியன் நிறுவனத்தில் டெய்லர். மூத்த மகள் மூன்றாம் வகுப்பும், இளைய மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், சரிவர வேலைக்குச் செல்வதில்லை.

வாரம் இரண்டு - மூன்று நாள் மட்டும் வேலைக்குச் செல்கிறார். கிடைக்கும் சம்பளம் முழுவதையும் மதுவுக்கே செலவிடுகிறார். எந்நேரமும் மதுபோதையிலேயே இருக்கிறார். குடித்துவிட்டு வந்து, என்னையும், மகள்களையும் துன்புறுத்துகிறார்; தினந்தோறும் அடி உதைபடுகிறேன். வீட்டை விட்டு வெளியேறுமாறு துரத்துகிறார். போலீசில் புகார் அளித்தும், எந்த பயனுமில்லை. கணவரின் குடிப்பழக்கத்தால், ஆதரவற்று நிற்கிறோம். எனக்கும், மகள்களுக்கும், அரசுதான் பாதுகாப்பும், அடைக்கலமும் அளிக்க வேண்டும்.

குன்னத்துார் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. சார் பதிவாளர் அலுவலகம், தற்காலிகமாக இடம் பெயர்ந்து, கடந்த ஏழு மாதங்களாக சிறிய கட்டடத்தில் இயங்கிவருகிறது. ஏற்கனவே உள்ள கட்டடம் தரமானதாக உள்ளதால், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தேவையில்லை என, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, புதிய கட்டடம் கட்டுமான பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இயங்கும் தற்காலிக கட்டடத்தில் கழிப்பிடம், வாகன நிறுத்தும் வசதிகள் இல்லை. இதனால், பத்திரப்பதிவுக்காக வரும் மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகத்தை விரைந்து சொந்த கட்டடத்துக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- ஊத்துக்குளி

வடக்கு மண்டல பா.ஜ.,

500 ஆசிரியர் பணியிடம்

அரசுப் பள்ளிகளில் காலி

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, பெரும்பாலான பள்ளிகளில், கணிதம், அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீண்ட நாட்களாக ஆசிரியர் இல்லாததால், அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது.

உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட்டுத்துறையிலும் மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. ஆய்வக உதவியாளர் இல்லாததால், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆய்வகம் பயன்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டிய மாணவர் சமுதாயம், ஆராய்ச்சி குறித்து தெரியாமலேயே கல்வி கற்றுக்கொண்டிருக்கிறது.

அதேபோல், நுாலகர் இல்லாததால் பெரும்பாலான பள்ளி நுாலகங்கள் செயல்படாத நிலையிலேயே உள்ளன. மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பள்ளி ஆய்வகங்கள், நுாலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மைதானம் இல்லாத பள்ளி, கல்லுாரிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்துத்தரவேண்டும்; உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களை விளையாட்டில் மிளிரச் செய்யவேண்டும்.

- அண்ணாதுரை, மாநில அமைப்பாளர், பாரத மாணவர் பேரவை.

ஹிந்துக்களுக்கு தேவை பாதுகாப்பு

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் கலவரங்களை உலக நாடுகளே உற்றுநோக்கிவருகின்றன. ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்வது, கோவில்களை சிதைப்பது போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. உலகிலேயே அமைதியை விரும்பும் ஒன்றுபட்ட மக்களின் ஒரே நம்பிக்கை, பிரதமர் மோடி மட்டுமே. அசாதாரணமான இந்த சூழலில், வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் உயிரை பாதுகாக்க பிரதமர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ஹிந்து எழுச்சிப் பேரவையினர்.

-------------------------

சாய்ந்த நிலையில் மின் கம்பங்கள்

பல்லடம், ஆக. 13-

கரடிவாவி -- அனுப்பட்டி செல்லும் ரோட்டில், பெரும்பாலான மின்கம்பங்கள், சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன.

பொதுமக்கள் கூறுகையில், ''இவை அனைத்தும் உயர் அழுத்த மின் கம்பங்கள். கம்பம் ஏதேனும் சாய்ந்தால், இணைப்பில் உள்ள உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அருகில்தான், கரடிவாவி துணை மின் நிலைய பகிர்மான அலுவலகம் உள்ளது. இருப்பினும், இவை குறித்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

விபத்து ஏற்படும் முன் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்'' என்றனர்.

----

பண்ணையாளர்கள் போலீசில் மனு

பல்லடம், ஆக. 13--

சூலுார், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கங்கா ரவி கிருஷ்ணன், 31. பல்லடம் அருகே ஆறாக்குளம் பிரிவில் உள்ள கறிக்கோழி பண்ணை ஒன்றில் சூப்பர்வைசர். இதே பண்ணையில், குறளரசன், 29 என்பவர், தொழிலாளியாக வேலை பார்த்தார்.

பண்ணையில் இருந்து செல்லும் கோழிக்குஞ்சுகள் எண்ணிக்கையில் குறைவதாக உரிமையாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.

அவர் விசாரித்ததில், இருவரும் இணைந்து, விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் கோழிக்குஞ்சுகளில் சிலவற்றை தனியே எடுத்து, கேரளாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.

பல்லடம் ஸ்டேஷனுக்கு வந்த கறிக்கோழி பண்ணையாளர்கள் சிலர் கூறுகையில், ''இருவரது தொடர்பில், வேறு பண்ணைகளிலும், கோழிக்குஞ்சுகள் விற்கப்பட்டு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து முழுமையாக விசாரித்து, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம்'' என்றனர்.

இதையடுத்து, கங்கா ரவி கிருஷ்ணன், குறளரசன் மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவரை, பல்லடம் போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

---

பள்ளி முன் போராட்டம்

அனுப்பர்பாளையம், ஆக. 13-

அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கில வழி கொண்ட இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள் இல்லை. மொத்தம் 28 பேர் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது.

பள்ளியில் போதிய ஆசிரியர்கள் நியமிக்ககோரி வேலம்பாளையம் கிளை மா.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. நடவடிக்கை இல்லை. கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி நேற்று காலை பெற்றோர்களுடன் மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ், நகர செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட ஏராளமானோர், பள்ளி நுழைவுவாயில் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உதயகுமார், ''போதிய ஆசிரியர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

---

குறுமைய விளையாட்டுப்போட்டிகள் துவக்கம்

திருப்பூர், ஆக. 13-

முதல் பருவத்தேர்வுகள் முடிந்ததையடுத்து, குறுமைய விளையாட்டு போட்டிகள், மாவட்டம் முழுதும் நேற்று துவங்கியது. ஆர்வமுடன் மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் களமிறங்கினர்.

திருப்பூர் வடக்கு குறுமைய போட்டி, சிறுபூலுவப்பட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிச் செயலாளர் கீர்த்திகாவாணிசதீஷ், பள்ளி முதல்வர் மணி மலர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இதில், 14 வயது மாணவியர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் கனிஷ்கா, யோகவி, 17 வயது பிரிவில், கொங்கு வேளாளர் மெட்ரிக்தக் ஷிதா, நக் ஷத்ராரித்திகா, 19 வயது பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி சன்மதி, மேகாஸ்ரீ, தனிநபர் பிரிவு, 14 வயது பிரிவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் அனுகிரஹா, 17 வயது பிரிவில் இப்பள்ளி மாணவி,தக் ஷிதா, 19 வயது பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் மேகாஸ்ரீ முதலிடம் பெற்றனர்.

தெற்கு குறுமையம்


திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் கோ-கோ போட்டி, பிரன்ட்லைன் அகாடமி பள்ளியில் நேற்று துவங்கியது. குறுமைய இணைச் செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். பிரன்ட்லைன் பள்ளி இணைச் செயலர் வைஷ்ணவி போட்டிகளை துவக்கி வைத்தார்.

குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், 14 வயது பிரிவில், 16, பதினேழு வயது பிரிவில், 8, 19 வயது பிரிவில், நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின.

'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடைபெற்றது. திறமை காட்டி வீரர், அணியினர் அடுத்தச் சுற்று போட்டிக்கு முன்னேறினர்.

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியர் டேபிள் டென் னிஸ் போட்டி, நேற்று நடந்தது. 14 வயது ஒற்றையர் பிரிவில், 7; இரட்டையர் பிரிவில், 8; 17 வயது ஒற்றையர் பிரிவில், 8; இரட்டையர் பிரிவில், 6; 19 வயது ஒற்றையர் பிரிவில், 5; இரட்டையர் பிரிவில் 3 அணிகள் பங்கேற்றன.

அவிநாசி


அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில், அவிநாசி கல்வி வட்டார அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் துவங்கின.

போட்டிகளை, பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாளில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கேரம், லான் டென்னிஸ், டென்னிகாய்ட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

---

வனவிலங்கு வாழ்விட பாதுகாப்பு அவசியம்

திருப்பூர், ஆக. 13-

''வன விலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது அவசியம்,'' என்று திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசினார்.

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் கே.எஸ்.சி., பள்ளியில் யானைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:

வனபரப்பு குறைவதால், யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர், பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதுவும், யானைகள் அழிவிற்கு காரணமாகிறது. இதனால் தான், சில நேரங்களில் காடுகளை விட்டு, ரோடு, குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன. யானைகளுக்கு ஞாபகசக்தி அதிகம். யானைகளின் உயிர்வாழ்வை உறுதி செய்ய இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த மையக்கருத்து காட்டுகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

---

அங்கன்வாடியில் எலிகள் விளையாட்டு

திருப்பூர், ஆக. 13-

அங்கன்வாடி மையத்தின் முன் மற்றும் வெளிப்பகுதியில், எலிகள் கூட்டமாக நடமாடுவதால், பெற்றோர் அச்சமடைந்து உள்ளனர்.

திருப்பூர், 17வது வார் டுக்கு உட்பட்டது, நெசவாளர் காலனி. இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டிய பின்புற வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. எம்.எஸ்., நகர், திருமலை நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 43 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.

அங்கன்வாடி மையத்தின் முன் வளாகம் சிமென்ட் தரைத்தளமின்றி, வெறுமனே மண்ணாக உள்ளது. மழை பெய்தால், ஈரப்பதம் அதிகமாகி, ஊர்வனவும் படையெடுக்கின்றன. குறிப்பாக, அங்கன்வாடி மையம் அருகில் ரேஷன் கடையும் செயல்படுவதால், அரிசி, கோதுமை என தானியங்களை சாப்பிட கால்வாய்களில் இருந்து எலிகள் கூட்டம் படையெடுக்கின்றன. இவ்வாறு அங்கன்வாடி மையம் முன்புற வளாகத்தில் எலிகள், அங்கும், இங்கும் ஓடுவது குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பெற்றோர் கூறுகையில், ''மாநகராட்சி, கல்வித்துறை அலுவலர்களிடம் கூறினோம். அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர். ஆனால், நடவடிக்கை இல்லை.

மழை பெய்து விட்டால், எலிகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. எனவே, தற்காலிகமாக மண் கொட்டி, தரைத்தளம் அமைத்து, எலி அச்சத்தில் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும்'' என்றனர்.

திருப்பூர் வடக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார கல்வி அலுவலர் அபராஜிதா கூறுகையில், ''அங்கன்வாடியை சுற்றியுள்ள இடங்கள் பழைய கட்டடங்களாக இருப்பதால், அவற்றை இடித்து விட்டு கட்ட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அங்கு குழந்தைகள் செல்லவே வாய்ப்பில்லை. நான்கு பணியாளர்கள் உள்ளனர். தொடர்ந்து, குழந்தைகளை கண்காணித்துக் கொண்டிருப்பர். அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்த்து, அவ்விடத்தை சுத்தப்படுத்தி, மண் கொட்டி, தரைத்தளம் அமைப்பதற்கான முயற்சி செய்கிறேன்'' என்றார்.

---

தனியார் வேலை முகாம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண், 439ல் நடைபெறும் முகாமில், தனியார் நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான தொழிலாளர்களை தேர்வு செய்கின்றனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றோர் முகாமில் பங்கேற்கலாம். வேலை தேடுவார் மற்றும் வேலை அளிப்போர், www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறையில் வேலைக்கு சேர்வதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது.

மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us