/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோமனுாரில் ஆர்ப்பாட்டம்; விசைத்தறியாளர் முடிவு
/
சோமனுாரில் ஆர்ப்பாட்டம்; விசைத்தறியாளர் முடிவு
ADDED : ஜன 27, 2025 06:29 AM

பல்லடம்; ''ஜவுளி உற்பத்தியாளரிடம் கூலி உயர்வைப் பெற்றுத்தர வலியுறுத்தி, வரும் 31ம் தேதி சோமனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என, விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கப் பொதுக்குழு ஆலோசனை கூட்டம் பல்லடம் அருகே, கோம்பக்காட்டுப்புதுாரில் நேற்று நடந்தது.
செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் குமாரசாமி தலைமை வகித்து பேசுகையில், 'கடந்த 2014க்கு பின் விசைத்தறி தொழில் சரியான பாதையில் செல்லவில்லை. விலைவாசி அனைத்தும் உயர்ந்தும் நமக்கான கூலி மட்டும் உயரவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அடுத்தடுத்த போராட்டங்கள் அறிவிக்கப்படும்' என்றார்.
முன்னதாக விசைத்தறியாளர்கள் பேசுகையில், 'கூலி பிரச்னைக்காகவே ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் சங்கத்தையே கலைத்து சென்றனர். ஒப்பந்தம் மேற்கொண்டு கையொப்பம் இட்ட பின்னும் கூலியை குறைக்கின்றனர்' என்றனர்.
கூலி உயர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, வரும் ஜன., 31 அன்று சோமனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், கூலி குறைப்பு நடவடிக்கையை கண்டித்து விரைவில் அடுத்தடுத்து போராட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

