ADDED : ஜூலை 08, 2025 11:58 PM
திருப்பூர்; ஆனி தேர்த்திருவிழாவில் நேற்று, விநாயகர், சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியருளிய நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த 4 ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, சந்திரசேகரர் - மனோன்மணி அம்மன் உற்சவமூர்த்திகள், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலையில், சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில், வாகன காட்சியருளி வருகின்றனர். ஐந்தாம் நாளான நேற்று, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி, கோலாகலமாக நடந்தது. காலையில், பஞ்சமூர்த்திகளுக்கு மஹா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.
மாலையில், மூஷிக வாகனத்தில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், காமதேனு வாகனத்தில் விசாலாட்சியம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியருளினர். தொடர்ந்து, தேர்வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாளை தேரோட்டம்
இன்று காலை சிறப்பு அபிேஷகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. திருமணக்கோலத்துடன், வெள்ளையானை வாகனத்தில், சோமாஸ்கந்தர் இன்று திருவீதியுலா செல்கின்றனர். நாளை அதிகாலை, சோமாஸ்கந்தர், விநாயகர் தேர்களுக்கு எழுந்தருள்கின்றனர்.
மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது. 11ம் தேதி மாலை பரிவேட்டை, 12ல் தெப்போற்சவம், 13ல் நடராஜர் தரிசன காட்சி, 14ல் மஞ்சள்நீர் விழா, 15ம் தேதி விடையாற்று உற்சவ பூஜைகள் நடக்க உள்ளன.