/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களிடம் மனு பெற்றார் துணை முதல்வர்
/
மக்களிடம் மனு பெற்றார் துணை முதல்வர்
ADDED : டிச 20, 2024 03:43 AM

திருப்பூர்; திருப்பூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதியிடம், விவசாய அமைப்பினர், பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை மனுக்களாக அளித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. துணை முதல்வரிடம் மனு அளிப்பதற்காக, விவசாய அமைப்பினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆய்வுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட துணை முதல்வர், ஒவ்வொருவரிடமிருந்தும் பொறுமையாக மனுக்களைப் பெற்றார்.
கடைகள் ஒதுக்கீடு ; வியாபாரிகள் மனு
திருப்பூர் மாநகர தினசரி மார்க்கெட் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை, காய்கறி வியாபாரிகளுக்கு மட்டுமே ஒதுக்கித் தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் ஐக்கிய ஜமாஅத் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ''கணக்கம்பாளையம், நாதம்பாளையம், பாரதி நகர், படையப்பா நகர், அறிவொளி நகர், தோட்டத்துப்பாளையம் பகுதி முஸ்லிம்கள் பயன்பாட்டுக்கு, அருகாமையிலேயே கபர்ஸ்தான் அமைத்துத்தரவேண்டும். பள்ளிவாசல்களுக்கு சொத்துவரி, குடிநீர் வரியில் விலக்கு அளிக்கவேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
நிலத்தை தாருங்கள்; பூசாரிகள் கண்ணீர்
பல்லடம் தாலுகா அம்மாபாளையம் விநாயகர் கோவில் பூசாரிகள் தண்டபாணி, தங்கவேல் ஆகியோர் அளித்த மனு:
அம்மாபாளையம் விநாயகர் கோவிலுக்கு மன்னர் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக பூசாரியாக இருந்துவருகிறோம். எங்கள் முன்னோருக்கு, ஆங்கிலேயர் காலத்தில், இனாம் பூமி 6.66 ஏக்கர் வழங்கப்பட்டது. 1967ல், இந்த நிலத்துக்கு ரயத்து வரியும் போட்டு கொடுத்தனர்.
விநாயகர் கோவிலை பராமரித்து, அந்நிலத்தில் மானாவாரி விவசாயம் செய்துவந்தோம். கடந்த 2023, செப்., மாதம் வரை, எங்களது தந்தை பெயரில் பட்டா - சிட்டா இருந்தது.
ஹிந்து அறநிலையத்துறை சார்பில், நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கடிதம் அனுப்பினர். கடந்த 2023, நவம்பரில், பூமியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை மீட்டுவிட்டதாக அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். பூசாரிகளிடமிருந்து அபகரித்த பூமியை, அறநிலையத்துறை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
'பணி வாய்ப்பை இழக்க விடாதீர்கள்'
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வு எழுதியோர், தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளதால், தமிழகம் முழுவதும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி மனு அளித்தனர்.
பணி நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் அளித்த மனு:
தமிழக பள்ளி கல்வித்துறையில், கடந்த பத்து ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. கடந்த பிப்., 4 ம் தேதி நடத்தப்பட்ட தகுதித்தேர்வில், 3,192 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து உத்தேச தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு ஆறுமாதமாகியும் இன்னும் பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏராளமான மனுக்கள் துணை முதல்வரிடம் வழங்கப்பட்டது.
----