ADDED : ஜன 16, 2025 04:32 AM

திருப்பூர்: பொங்கல் தொடர்விடுமுறை காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், திருப்பூரில் பரபரப்பாக காணப்படும் பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு, 12 ம் தேதி முதல், 19 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளும் தொடர்விடுமுறையில் உள்ளன. இதன்காரணமாக, பொங்கல் கொண்டாடி முடித்ததும், நண்பர்கள் மற்றும் குடும்ப சகிதமாக, சுற்றுலா சென்றுவிட்டனர்.
திருப்பூர் பகுதியில் உள்ள, பெரும்பாலான கடைகளுக்கு, மூன்று நாட்கள் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பரபரப்பாக காணப்படும், குமரன் ரோடு, காதர்பேட்டை, நஞ்சப்பா பள்ளி ரோடு பகுதிகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில், கடைகள் மூடியதால், வெறிச்சோடி காணப்பட்டது.
கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், வழக்கமாக விடுமுறை நாளில் வெளியே வரும் வெளிமாநில தொழிலாளர்களும் தென்படவில்லை. பெரும்பாலான ரோடுகள் பகல் நேரத்தில் வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர்விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு சென்றதால், 'டூ வீலர்' ஸ்டாண்டுகளில், வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல், 'ஹவுஸ்புல்' ஆகிவிட்டன.
திருப்பூர் பகுதியில் உள்ள சினிமா தியேட்டர்களில், ஒவ்வொரு காட்சியின் போதும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ளது. சில நிறுவனங்கள், நாளை முதல் இயக்கத்தை துவக்க திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள், 19ம் தேதிக்கு பிறகே, வழக்கமான இயக்கத்துக்கு திரும்பும் என, உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று, காணும் பொங்கல்
இன்று காணும் பொங்கல் என்பதால், கிராமங்களில், பூ பறிக்க செல்லும் நிகழ்ச்சி நடக்கும். திண்பண்டங்களுடன் சென்று, ஆறு, குளம், குட்டைகளில் விளையாடுவர். உணவு அருந்தி முடித்த பின், அங்கிருந்து ஆவாரம் பூ பறித்துவந்து, விநாயகர் கோவிலில் வைத்து வழிபட்டு, தை பொங்கல் வழிபாட்டை நிறைவு செய்வது வழக்கம்.
நகரப்பகுதியில், குடும்ப சகிதமாக, பார்க்குகளுக்கு சென்று கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது.