/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமையான ஜம்புக்கல் மலைத்தொடர் அழிப்பு; பாதுகாக்க 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
/
பசுமையான ஜம்புக்கல் மலைத்தொடர் அழிப்பு; பாதுகாக்க 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பசுமையான ஜம்புக்கல் மலைத்தொடர் அழிப்பு; பாதுகாக்க 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பசுமையான ஜம்புக்கல் மலைத்தொடர் அழிப்பு; பாதுகாக்க 2 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 12, 2025 07:24 AM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள, ஜம்புக்கல் மலையை தனி நபர் ஆக்கிரமித்து அழித்து வருவது குறித்து, விவசாயிகள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத அரசு துறை அதிகாரிகளை கண்டித்து, இரண்டாவது நாளாக நேற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள ஆண்டியகவுண்டனுாரில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக, 2,700 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலைத்தொடர் அமைந்துள்ளது. இதனை தனி நபர் ஆக்கிரமித்து, கன ரக அகழ்வு இயந்திரங்களை கொண்டு அழித்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான மலையை ஆக்கிரமித்து, பசுமையான இயற்கை சூழல், நீர் வழித்தடங்கள், மரங்கள், கனிம வளங்களை அழித்து, ஆக்கிரமித்து வருவது குறித்து வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு, விவசாயிகள் தரப்பில் பல முறை புகார் அளித்தனர்.
இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தனியாருக்கு சாதகமாக அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதோடு, அரசு சொத்து அபகரிக்கும் நபருக்கு துணை போகும் அதிகாரிகளைக்கண்டித்து, நேற்று முன்தினம் முதல், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள், மலையடிவாரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகலாக அங்கேயே பந்தல் அமைத்து, இரண்டாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மலையை அழிக்க பயன்படும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசுக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சித்து வரும் நபர்கள் மீதும், கண்டு கொள்ளாத அரசு துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.
உலக மலைகள் தினத்தில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக உள்ள ஜம்புக்கல் மலையை காக்க வேண்டும், என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

