/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூண்டியில் பக்தர்கள் கடும் அவதி
/
பூண்டியில் பக்தர்கள் கடும் அவதி
ADDED : பிப் 12, 2025 12:30 AM

திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் வளாகத்திற்கு வெளியே, 300 மீட்டர் துாரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதிகளவு பக்தர்கள் கூடுவர் என்பது அறநிலையத்துறைக்கு நன்றாக தெரிந்தும் கூட, பக்தர்களுக்கு போதுமான வசதியை ஏற்படுத்த அறநிலையத்துறை தவறி விட்டதாக, பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பக்தர்கள் சிலர் கூறியதாவது:
தைப்பூசம் என்பதால், காலையில் இருந்தே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் பொறுமை இழந்து ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் செல்ல முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவிலை ஒட்டிய ரோட்டில், ஏராளமான தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் தாங்கள் வந்த வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவித்தனர்.
இதனால் பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அன்னதானம் வழங்குவதற்கு என இடம் ஒதுக்காமல் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இதனால், அன்னதானம் வாங்க திரண்ட கூட்டத்தால், கோவிலுக்கு செல்ல வழி தெரியாமல், பக்தர்கள் பெரிதும் கஷ்டமாக இருந்தது. கடந்தாண்டும் இதேபோல் தான் சிரமப்பட்டோம்.
அப்போதே இது குறித்து செயல் அலுவலரிடம் முறையிட்டோம். அடுத்தாண்டு போதுமான வசதி செய்யப்படும் என்றார். ஆனால், செய்யவில்லை. பல்வேறு பிரார்த்தனைகளுடன் சுவாமி தரிசனம் செய்ய வரும் எங்களை போன்ற பக்தர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளையாவது அறநிலையத்துறை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.