ADDED : ஆக 08, 2025 11:43 PM

திருப்பூர்:
ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமை, ஆடி பவுர்ணமி, வரலட்சுமி நோன்பு ஆகியவற்றை முன்னிட்டு, நேற்று திருப்பூர் பகுதி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு கோவில்களிலும் அம்மன் அருள்பாலித்தார்.
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அபிேஷகம் மற்றும் பல்வேறு அவதாரங்களில் அம்மன் அலங்கார பூஜைகளும் சிறப்பான முறையில் நடைபெறும். நேற்று ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்கள் மற்றும் சன்னதிகளில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பல்வேறு திரவியங்களால், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது;அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம், கூழ் வழங்குதல் போன்றவை நடைபெற்றன. பல்வேறு கோவில்களிலும் பல்வேறு அவதாரங்களில் மூலவர் அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். அனைத்து கோவில்களிலும் திரளான பக்தர்கள் இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
ஆடி பவுர்ணமி வழிபாடு சிவாலயங்களிலும் அம்மன் சன்னதிகளிலும் ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.
வரலட்சுமி நோன்பு நேற்று வரலட்சுமி நோன்பும் கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையும், திருவிளக்கு பூஜைகளும் நடந்தது. குடும்ப நலன் வேண்டி மகாலட்சுமியை வழிபடும் விதமாக, பெண்கள் விரதமிருந்து வரலட்சுமி வழிபாடு நடத்தினர்.
வீடுகளிலும் வரலட்சுமி நோன்பு முன்னிட்டு, அம்மன் அலங்காரம் செய்து பாட்டுப் பாடி வழிபாடு செய்தனர். பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், பூ, வளையல், சேலை வழங்கி நோன்பு கடைபிடித்தனர்.
நல்லுார் ஈஸ்வரன் கோவில் வளாகத்தில், செல்லாண்டியம்மன், பேச்சியம்மன், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில்கள் சார்பில் வரலட்சுமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
குத்துாஸ்புரம் சவுடேஸ்வரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இவற்றில் ஏராளமான பெண்கள் வரலட்சுமி நோன்பு கடைபிடித்து திருவிளக்கு பூஜை நடத்தினர்.