ADDED : மார் 06, 2024 12:11 AM
பொங்கலுார்;கோவையில் டூ வீலரை திருடி வந்து, பொங்கலுாரில் வழிப்பறியில் ஈடுபட்ட திண்டுக்கல் வாலிபரை பொதுமக்கள் 'தர்மஅடி' கொடுத்து போலீசில் ஒப் படைத்தனர்.
பொங்கலுாரை சேர்ந்த மயில்சாமி மனைவி கனிமொழி, 50. இவர் நேற்று காலை அம்மன் நகர் பகுதியில் நடைப்பயிற்சி சென்றார். அப்போது அங்கு டூவீலரில் வந்த இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த ஒன்பதரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். இதில், இருவரும் கீழே விழுந்தனர்.
கனிமொழி சத்தம் போட்டதால் திருட வந்தவர் தப்பினார். ஆனால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்து, அவிநாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், பிடிபட்ட நபர், திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரை சேர்ந்தகாதர்பாஷாவின் மகன் அகமது யாசின், 20 என்பதும், டூவீலரை மலுமிச்சம்பட்டியில் திருடி வந்து, பொங்கலுாரில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

