/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வைர விழா கண்ட அரசு பள்ளி கட்டடம்: பராமரிப்பு இன்றி பாழாகி வரும் அவலம்
/
வைர விழா கண்ட அரசு பள்ளி கட்டடம்: பராமரிப்பு இன்றி பாழாகி வரும் அவலம்
வைர விழா கண்ட அரசு பள்ளி கட்டடம்: பராமரிப்பு இன்றி பாழாகி வரும் அவலம்
வைர விழா கண்ட அரசு பள்ளி கட்டடம்: பராமரிப்பு இன்றி பாழாகி வரும் அவலம்
ADDED : மார் 15, 2025 11:48 PM

பல்லடம்: பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும், பல்வேறு பொறுப்புகளில், பதவி மற்றும் அரசு துறைகள், தொழில்கள் என சிறந்து விளங்கி வருகின்றனர்.
எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கிய பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி, 1952ம் ஆண்டு கட்டப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டடம், ஓடுகளால் வேயப்பட்ட உயர்வான மேற்கூரை என, பழைய கட்டடக்கலையை எடுத்துரைப்பதாக உள்ளன.
முன்னர், அரசு பள்ளி வகுப்பறைகளாக செயல்பட்டு வந்த இக்கட்டடங்கள், பின்நாளில், அரசு கல்லுாரி துவங்கியதும், கல்லுாரி பயன்பாட்டுக்காக விடப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரிக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டதும், பழைய வகுப்பறை கட்டடங்கள் பயன்படுத்தாமல் விடப்பட்டன.
இதன் காரணமாக, சிறிதும் விரிசல் ஏற்படாமல் கம்பீரமாக நிற்கும் கட்டடங்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் பாழ்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளியின் அவலம் குறித்து, சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில், கட்டிய சில தினங்களிலேயே விரிசல் விடும் கட்டடங்களுக்கு மத்தியில், வைர விழாக் கண்ட பல்லடம் அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள், இன்றும் உறுதியாக நிற்கின்றன. ஏராளமான மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த இந்த அரசு பள்ளி கட்டடம், அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று பாழாகி வருகிறது.
கொரோனா காலத்தில், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக, இங்குள்ள வகுப்பறைகள் பெரிதும் பயன்பட்டன. ஆனால், இதன் பிறகு, கட்டடத்தை கண்டு கொள்வார் எவருமில்லை. நம் முன்னோர் எத்தனையோ பேரின் உபயத்தால் உருவான இக்கட்டடத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.