/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண் கால்வாய்களை துார்வாருங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
/
மண் கால்வாய்களை துார்வாருங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
மண் கால்வாய்களை துார்வாருங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
மண் கால்வாய்களை துார்வாருங்க! விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 06, 2024 09:45 PM
உடுமலை; பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசன பகுதிகளில், விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மண் கால்வாய்கள், துார்வாரப்படாமல், காணாமல் போயுள்ளன. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன், கால்வாய்களை துார்வார மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, 3.77 லட்சம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுழற்சி முறையில், மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
தற்போது, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது; விரைவில், மூன்றாம் மண்டல பாசனம் துவங்க உள்ளது.
இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு, விளைநிலங்களுக்கு பாசன நீர் கிடைக்க உள்ள நிலையில், விளைநிலத்திற்கு தண்ணீர் வரும் மண் கால்வாய்கள் துார்வாரப்படாமல் காணாமல் போயுள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கிளை வாய்க்கால்களிலிருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் பகிர்மான வாய்க்கால்கள் அனைத்தும், விவசாய பிரதிநிதிகளைக்கொண்டு இயங்கும், கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் (பாசன சபை) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகின்றன.
இந்த பகிர்மான வாய்க்கால்களில், கான்கிரீட் கரை மற்றும் தளம் அமைக்கப்படாமல் மண் கால்வாய்களாகவே உள்ளன.
மண்டல பாசனத்திற்கு இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்படுவதால், மண் கால்வாய்களில், மண் சரிவு, முட்புதர்கள் முளைத்தல் உட்பட காரணங்களால், அவை காணாமல் போகின்றன.
பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதும், அவசர கதியில், அக்கால்வாய்கள் துார்வாரப்படுகின்றன. பாசன சங்கங்களிடம் போதிய நிதி இல்லாத நிலையில், விவசாயிகளிடம் பங்களிப்பு தொகை பெறப்பட்டு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில பகுதிகளில் விவசாயிகளே செலவினத்தை பகிர்ந்து, மண் கால்வாய்களை துார்வாருகின்றனர்.
எனவே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பாசன காலம் துவங்கும் முன்பே, மண் கால்வாய்களை துார்வாரும் பணிகளை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மண் கால்வாய்களில் கான்கிரீட் தளம் மற்றும் கரைகள் அமைத்தால், விரயம் தவிர்க்கப்பட்டு, போதிய தண்ணீர் இல்லாமல், ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு குறைவதை தவிர்க்கலாம். இந்த கோரிக்கை குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.