/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிமாவட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை:எஸ்.பி., தகவல்
/
வெளிமாவட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை:எஸ்.பி., தகவல்
வெளிமாவட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை:எஸ்.பி., தகவல்
வெளிமாவட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை:எஸ்.பி., தகவல்
ADDED : ஆக 23, 2011 11:27 PM
திருப்பூர் : ''வெளிமாவட்டங்களில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை பிடிக்க,
மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என எஸ்.பி., பாலகிருஷ்ணன்
தெரிவித்தார்.திருப்பூரில் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன;
திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள்,
பெரும்பாலும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
குற்றங்களை
செய்துவிட்டு, சொந்த மாவட்டங்களில் பதுங்கும் குற்றவாளிகளை பிடிப்பது,
போலீசாருக்கு சவாலாக இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும்
விதமாக, வெளிமாவட்டங்களில் நிரந்தரமாக தங்கி, குற்றவாளிகளை பிடிக்கும்
வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.பி., பாலகிருஷ்ணன்
நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூரில் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க
பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில்
போலீசார் பற்றாக்குறை இருந்ததால், குற்றத்தடுப்பு மற்றும் குற்றங்கள்
கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் சிரமம் ஏற்பட்டது. 750 போலீசார் தேவை என
அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். கடந்த 10 நாட்களில் 563 போலீசார்,
திருப்பூர் மாவட்டத்துக்கு கூடுதலாக வந்துள்ளனர். இவர்களுக்கு நேரடியாக,
போலீஸ் ஸ்டேஷன் களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக,
ஆயுதப்படை பிரிவிலும் பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் போலீசாரை கொண்டு
குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்கள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகள் மாவட்டம்
முழுவதும் தீவிரப்படுத்தப்படும்.ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசார்
அடங்கிய தனிப்படை ஏற்படுத்தி, தெற்கு மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்கள்
மற்றும் மத்திய மாவட்டங்களில் குற்றங்கள் கண்டுபிடிப்பு பணிகளில்
ஈடுபடுத்தப்படுவர். அக்குழு, குற்றங்களின் விவரங்களை சேகரிப்பதுடன்,
குற்றவாளிகளின் பின்னணி தொடர்புகளையும் ஆராயும் நடவடிக்கைகளில்
ஈடுபடுவர்.தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய
தென்மாவட்டங்கள்; புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மத்திய
மாவட்டங்கள், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் ஆகிய வடக்கு மாவட்டங்கள் என
இப்பகுதிகளை சேர்ந்தவர்கள், திருப் பூரில் அடிக்கடி குற்றச்சம்பவங்களில்
ஈடுபட்டு விட்டு, சொந்த ஊருக்குச் சென்று பதுங்கிக் கொள்கின்றனர்.
குற்றவாளிகளை தேடி கண்டுபிடிப்பதும், அவர்கள் கொடுக்கும் முகவரிகளும்
போலியாக இருப்பதால், இதற்கென உள்ள தனிப்படை போலீசார், அம்மாவட்டங்களில்
நிரந்தரமாக தங்கி கண்காணித்து, விசாரணையில் ஈடுபடுவர்; வெளிமாவட்ட
குற்றவாளிகளை பிடிப்பதில் முனைப்பு காட்டுவர். இதனால், விரைவில்
குற்றவாளிகள் பிடிபடுவதுடன், திருப்பூரில் குற்றங்களும் தொடராமல்
தடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும்
வெளிமாவட்ட தொழிலாளர்கள் மற்றும் காற்றாலைகளில் பணிசெய்யும் தொழிலாளர்கள்
குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன, என்றார்.