/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாம்பல் பூசணி நேரடி கொள்முதல்; சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
சாம்பல் பூசணி நேரடி கொள்முதல்; சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
சாம்பல் பூசணி நேரடி கொள்முதல்; சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
சாம்பல் பூசணி நேரடி கொள்முதல்; சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : மே 11, 2025 11:54 PM
உடுமலை; கேரளா வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதால், உடுமலை பகுதியில், சாம்பல் பூசணி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக இரு சீசன்களில், சாம்பல்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது.
குறைந்த தண்ணீரில், இச்சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்பதால், முன்பு தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதுார், மலையாண்டிகவுண்டனுார் உள்ளிட்ட கிராமங்களில், சாம்பல்பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால், கடந்தாண்டு போதிய விலை கிடைக்கவில்லை; கிலோ 1 ரூபாய் அளவுக்கு, விலை சரிந்ததால், காய்களை அறுவடை செய்யாமல், விளைநிலங்களிலேயே அப்படியே விடும் நிலை ஏற்பட்டது.
இதனால், கடந்த சீசனில், சாம்பல்பூசணி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், அதிக வெயில் காரணமாக நடவு செய்த விதைகள் போதியளவு முளைவிடவில்லை.
விவசாயிகள் கூறியதாவது: சாம்பல் பூசணி சாகுபடியில், செலவு குறைவாக உள்ளதால், முன்பு அதிகளவு பயிரிடப்பட்டு வந்தது. ஆனால், அறுவடை சமயங்களில் விலை வீழ்ச்சியால், நஷ்டம் ஏற்படுகிறது.
இருப்பினும், கேரளா வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்து கொள்வதால், பரவலாக இச்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் சந்தைகளை விட கேரளாவில், இவ்வகை பூசணிக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.