/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏமாற்றம் தந்த மழை: விவசாயிகள் கவலை
/
ஏமாற்றம் தந்த மழை: விவசாயிகள் கவலை
ADDED : டிச 01, 2025 02:23 AM
பொங்கலுார்: இந்த ஆண்டு திருப்பூர் மாவட்ட பகுதிக்கு பருவமழை துவக்கம் முதலே போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் குளம், குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பாமல் வறண்டு கிடக்கிறது.
நிலத்தடி நீரோட்டம் சரிந்துள்ளது. தற்போது உருவாகிய டிட்வா புயல் மழையை கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் திருப்பூர் பகுதிக்கு மழையை தராமல் ஏமாற்றம் அளித்துள்ளது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் பருவமழை தீவிரமாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் மழை படிப்படியாக குறைந்து இறுதியில் மழை இருக்காது.
மழை அளவு குறைந்ததால் அடுத்த போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களும் போதிய அளவு வளர்ச்சி இன்றி காணப்படுகிறது. இதனால் தீவனத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
வரும் மாதங்களில் கால்நடைகளுக்கு தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நெருக்கடிக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

