/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் ஏமாற்றம்; நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம்
/
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் ஏமாற்றம்; நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம்
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் ஏமாற்றம்; நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம்
ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் ஏமாற்றம்; நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம்
ADDED : பிப் 07, 2025 06:54 AM
உடுமலை; அனைத்து கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்துக்கு, போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அனைத்து துறை அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
தமிழக அரசு, வேளாண்மை சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களைக்கொண்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை கடந்த 2022ல், அறிமுகப்படுத்தியது.
தமிழகத்திலுள்ள, 12,524 ஊராட்சிகளிலும், 5 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, வட்டாரத்துக்கு ஒரு ஊராட்சியை தேர்வு தேர்வு செய்து, அங்கு, வேளாண்துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை வாரியம், வேளாண் பொறியியல் துறை, மின்வாரியம், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், விவசாயிகளிடமிருந்து வேளாண் சார்ந்த கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு தேவையான மனுக்கள் பெறப்பட்டது. பல ஆண்டுகளாகியும் பெரும்பாலான மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய உலர் களம் அமைத்தல்; பாசன நீர் வழித்தடங்களை துார்வாருதல்; நீர் வள ஆதாரங்களை பெருக்கி, சோலார் மின் உற்பத்தி கட்டமைப்பு வழங்குதல்; தடுப்பணைகள் அமைத்தல்; விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல் போன்ற முக்கிய தேவைகளுக்காக, வழங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மனுக்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்பாட்டுக்கு, தமிழக அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை; ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கான செலவினம் மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள மானிய திட்டங்களின் கீழ், விதை மற்றும் இடுபொருட்களை, தேர்வான ஊராட்சி விவசாயிகளுக்கு வழங்கி, அதிகாரிகள் சமாளித்து வருகின்றனர்.
ரோடு அமைத்தல்; தடுப்பணைகள் கட்டுதல் போன்ற மனுக்களை ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்புகின்றனர். அத்துறையினர் இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுகிறது.
ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மானிய திட்டங்களை ஒருங்கிணைத்து, 'கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்,' என பெயர் மட்டும் மாற்றியுள்ளனர்; திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து பகுதி விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

