/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
/
தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
ADDED : செப் 03, 2025 11:47 PM

திருப்பூர்; ''கிராமப்புறங்களில் நிரம்பி ததும்பும் குளம், குட்டைகள் பேரிடர் ஆபத்து ஏற்படுத்தக் கூடும் என்பதால், சுற்றுவேலி அமைக்க வேண்டும்'' என, தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் தெரிவித்தார்.
விரைவில், வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில், பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட தீயணைப்புத்துறையினர் சார்பில், ஆண்டிபாளையம் குளத்தில் ஒத்திகை நடத்தப்பட்டது. பேரிடர் மற்றும் விபத்து சமயங்களில் மீட்புப்பணிக்கு தேவையான உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், ஆண்டிபாளையம் படகு குழாம் மேலாளர் பாலசுப்ரமணியன் முன் னிலை வகித்தனர். தீயணைப்பு வீரர்கள், நீரில் சிக்குவோரை மீட்பது குறித்து ஒத்திகை செய்து காண்பித்தனர்.
தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் கூறியதாவது: மாவட்ட தீயணைப்புத்துறையில் பேரிடர் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பொது மக்கள் நீர்நிலைகளில் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில், இத்தகைய பயிற்சி வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, குளம், குட்டை மற்றும் திறந்தவெளி கிணறுகள் தான் பருவமழை பேரிடர் ஆபத்தாக உள்ளன.குறிப்பாக, அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், குளம், குட்டைகள் ஏராளமாக உள்ளன. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால், அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பியுள்ளன. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் தோட்டத்து வீடுகளில் உள்ள கிணறுகளும் நிரம்புகின்றன.
குளம், குட்டைகளில் குளிக்க, விளையாட செல்வோர் நீரில் சிக்கி பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடக்கிறது. இந்த இடங்களையொட்டி, மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட, குளம், குட்டை, கிணறுகளில் விழுந்து விடுகின்றன.எனவே, குளம், குட்டைகளை சுற்றி வேலி அமைக்க வேண்டும். தனியார் தோட்டத்து வீடுகளில், திறந்தவெளியில் உள்ள கிணறுகளுக்கு வலுவான மேல் மூடி இட வேண்டும். பயன்பாடற்ற கல்குவாரிகளில் மீன் பிடிக்க செல்வோர், நீருக்குள் தவறி விழும் சம்பவம், அவ்வப்போது நடக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.