ADDED : ஏப் 23, 2025 12:43 AM

உடுமலை; போடிபட்டியில், வரி செலுத்தாத குடியிருப்புகளில், குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியம், போடிபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி, தொழில் உரிமக்கட்டணங்களை செலுத்த, தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்குவது, ஆட்டோ விளம்பரம், வீடுதோறும் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் சென்று அறிவுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதிக்கட்டமாக வரி செலுத்தாத குடியிருப்புகளில், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இறுதி அவகாசம் அளித்தும், வரிசெலுத்தாதவர்களின் குடியிருப்புகளில், நேற்று முதல் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள, 4,500 குடியிருப்புகளில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில் வரிசெலுத்தப்படாமல் உள்ளது. அதில் பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ள, ஏழு வீடுகளில் முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு குழாய்கள் துண்டிக்கப்பட்டன.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிதுார் ரகுமான், ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் குழுவாகச்சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வரிசெலுத்தாமல் தாமதம் செய்யும் குடியிருப்புகளில் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

