/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழை துவங்கியது நோய் தடுப்பு நடவடிக்கை
/
பருவமழை துவங்கியது நோய் தடுப்பு நடவடிக்கை
ADDED : அக் 18, 2025 11:34 PM
திருப்பூர்: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், தமிழகத்தின் பல இடங்களில் தொடர் மழை பெய்ய துவங்கியுள்ளது.
இதனால், நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக துவங்கி, கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதியை உறுதி செய்ய வேண்டும். மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு சீராக இருப்பதை, மழைநீர் தேங்காமல் வெளியேறுவதை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகம், காத்திருப்பு அறை, ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றை துாய்மைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் குடிநீர் வினியோகத்தின் தரம் உறுதி செய்வதுடன், குடிநீரில் போதியளவு குளோரின் கலக்கப்பட்டு, வினியோகிக்கப்படுகிறதா என்பதையும் கட்டாயம் கண்காணிக்க வேண்டும்.
சுகாதார மாவட்டம், வட்டாரங்கள் வாரியாக விரைவு சிகிச்சை குழு, கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.
பருவமழைக்கு பின் ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய் தொற்று குறித்த விபரங்களை முன்கூட்டியே அறிந்து, காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளை கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் மருத்துவம், சுகாதார நலப்பணி துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.