/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பிழந்த மனுக்கள்! குறையை எழுத்தால் வடிக்க இயலாததே குறை; தீர்வு கிடைக்காமல் அப்பாவி மக்கள் ஏமாற்றம்
/
மதிப்பிழந்த மனுக்கள்! குறையை எழுத்தால் வடிக்க இயலாததே குறை; தீர்வு கிடைக்காமல் அப்பாவி மக்கள் ஏமாற்றம்
மதிப்பிழந்த மனுக்கள்! குறையை எழுத்தால் வடிக்க இயலாததே குறை; தீர்வு கிடைக்காமல் அப்பாவி மக்கள் ஏமாற்றம்
மதிப்பிழந்த மனுக்கள்! குறையை எழுத்தால் வடிக்க இயலாததே குறை; தீர்வு கிடைக்காமல் அப்பாவி மக்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 14, 2025 12:41 AM

'அய்யா... மனு எழுதோணும்'
'அம்பது ரூபா...'
'கொடுத்துடறன் அய்யா...'
'என்ன பிரச்னைங்கறத சட்டுப்புட்டுன்னு சொல்லிரோணும்... நேரம் கடத்தக்கூடாது'
'சரிய்யா... பிரச்னையைச் சொல்லட்டுமா?'
கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் இத்தகைய காட்சிகளைக் காணலாம். அன்றைய தினம் நடைபெறும் கலெக்டர் தலைமையிலான குறைகேட்புக்கூட்டத்துக்கு மக்கள் குவிகின்றனர்.
தனிநபர் பிரச்னைகள் மற்றும் ரோடு, சாலை வசதி, பஸ் வசதி, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, இலவச வீட்டுமனை பட்டா என பல்வேறு பொது பிரச்னைகள், கோரிக்கைகளை குறிப்பிட்டு, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கின்றனர்.
அறியாமையை அறிந்து'கறக்கப்படும்' பணம்
படிப்பறிவு இல்லாதோர், முதியவர்களால் சுயமாக மனு எழுத முடிவதில்லை. கலெக்டர் அலுவலக நுழைவாயில் முதலான நடைபாதை ஓரத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து, மனு எழுதிக்கொடுக்கின்றனர்.
மனு எழுதுவோர், மனுதாரர் தெரிவிக்கும் விவரங்களை கேட்டுக்கொண்டு, அதனடிப்படையில், வெள்ளைத்தாளில் மனு எழுதி கொடுக்கின்றனர். மனு எழுதுவோர் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பெரும்பாலானோர், ஒரு மனுவுக்கு 50 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். சிலரோ, தங்களிடம் மனு எழுத வருவோரை பார்வையாலேயே எடைபோட்டு, அவர்களின் அறியாமையை பயன்படுத்தி, அதிக தொகை கறந்துவிடுகின்றனர்.
தாறுமாறாக எழுதினால்மனுவுக்கு மதிப்பு இல்லை
குறிப்பாக, முதியவர்கள், பெண்களிடம், ஒரு மனு எழுதுவதற்கு, 100 ரூபாய், 150 ரூபாய் என வசூலிக்கின்றனர்.
இதுபோல், கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள், ஒழுங்காக மனுவை எழுதிக்கொடுத்தாலாவது பரவாயில்லை. புரியாத கையெழுத்தில் ஏனோதானோவென்று எழுதிக்கொடுப்பதால், மனுவுக்கே மதிப்பு இல்லாமல் போகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
உறுப்பினர் சேர்க்கையும்வசூல் வேட்டையும்
டேபிள், சேர் சகிதம் அமர்ந்து, குழு அமைத்து மனு எழுதி கொடுக்கும் சிலரோ, மனு எழுதிக்கொடுப்பதோடு கூடவே, தங்கள் அமைப்புக்குஉறுப்பினர் சேர்க்கை என்கிற பெயரில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
தங்களிடம் மனு எழுத வருவோரை திரட்டி, திடீரென ஆர்ப்பாட்டங்களும் நடத்துகின்றனர். பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு ஏற்படாதவகையில், பெரும்பாலும் தங்கள் லேட்டர் பேடிலேயே மனு எழுதிக்கொடுத்து அனுப்புகின்றனர்.
கலெக்டர் மீதுமக்கள் நம்பிக்கை
''கலெக்டர் அய்யா...
கலெக்டர் அலுவலக வளாகத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும், மக்களை தவறாக வழிநடத்தும் மனு எழுதுவோரை அப்புறப்படுத்த வேண்டும்.
முன்பு இலவசமாக மனு எழுதித்தரும் நடைமுறை இருந்தது. இதை மீண்டும் கொண்டு வரவேண்டும். மனுவை முறையாக எழுதிக்கொடுத்து, குறைந்த கட்டணம் பெறும் வகையிலாவது குறைந்தபட்சம் ஏற்பாடு செய்ய வேண்டும்''
இப்படி மனு எழுதி கலெக்டரிடம் கொடுக்க வேண்டும் என்று மனு எழுத முடியாத மக்களின் ஆசை. மக்களின் இந்த நம்பிக்கையை கலெக்டர் நிச்சயம் நிறைவேற்றினால், இவர்களிடம் ஆனந்தக்கண்ணீரைப் பார்க்கலாம்.
புரியாத மனுக்கள்
ஏமாறும் மக்கள்
கடந்த 7ம் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளி உதவித் தொகை கோரும் மனு அளிப்பதற்காக, தாராபுரத்தை சேர்ந்த, அப்பாச்சி என்ற, 80 வயது மாற்றுத்திறனாளி முதியவர் வந்தார்.
ஒரு பக்கத்தில் மனு எழுதிக்கொடுப்பதற்கு, அம்முதியவரிடம் 100 ரூபாயை எழுத்தர் வசூலித்துள்ளார். கூடுதல் தொகையை வசூலித்துவிட்டு, மனுவையும் புரியாதவகையில் கிறுக்கி தள்ளியிருந்தார்.
குறைகேட்பு கூட்டத்தில், மனுவை பதிவு செய்த சமூக பாதுகாப்பு அலுவலர்களால், அம்மனுவில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படிக்க முடியவில்லை. இதையடுத்து, வேறு மனு எழுதிக்கொடுக்குமாறு அறிவுறுத்தினர். மனு எழுதும் பகுதிக்கு முதியவர் சென்றபோது, அந்நபரை காணவில்லை. இதையடுத்து, 50 ரூபாய் கொடுத்து, புதிதாக வேறு மனு எழுதிக்கொடுத்துச்சென்றார், அம்முதியவர்.
- நமது நிருபர் -