/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்கள் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை: ஒன்றிய நிர்வாகம் மீது அதிருப்தி
/
குளங்கள் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை: ஒன்றிய நிர்வாகம் மீது அதிருப்தி
குளங்கள் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை: ஒன்றிய நிர்வாகம் மீது அதிருப்தி
குளங்கள் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை: ஒன்றிய நிர்வாகம் மீது அதிருப்தி
ADDED : அக் 24, 2025 11:51 PM
உடுமலை: வடகிழக்கு பருவமழை சீசனில், கிராம குளங்களில், மழை நீரை சேகரிக்க ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், 118, குளம், சிறிய குட்டைகள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, ஏழு குளங்களுக்கு மட்டும், திருமூர்த்தி அணையிலிருந்து அரசாணை அடிப்படையில், தண்ணீர் வழங்கப்படுகிறது.
பிற குளங்களுக்கு, மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரே முக்கிய நீர்வரத்தாக உள்ளது; நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாகவும் இக்குளங்கள் உள்ளன. பி.ஏ.பி., பாசனப்பகுதியிலுள்ள குளங்களில், மழைக்காலத்தில், பாசன நீரை தேக்கி வைக்கின்றனர்.
இவ்வாறு, கிராமப்புறங்களில், மழை நீர் சேகரிப்புக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும் உதவியாக இருக்கும் குளங்கள், முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
குடியிருப்புகளில் இருந்து, குளங்களுக்கு மழை நீர் வரும் வரத்து ஓடைகள், ஆக்கிரமிக்கப்பட்டும், துார்வாரப்படாமலும் உள்ளன. மேலும், முழு கொள்ளளவில், தண்ணீர் தேக்க முடியாத அளவுக்கு, கரைகள் வலுவிழந்து பரிதாப நிலையில் உள்ளன.
இதனால், குறுகிய காலத்தில், தண்ணீர் வற்றி, குளங்கள் பரிதாப நிலையில் காணப்படுகின்றன. தற்போது, உடுமலை ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான குளங்களில், தண்ணீர் இல்லை.
வடகிழக்கு பருவமழை சீசனிலேயே, அதிக மழைப்பொழிவு உடுமலை பகுதிக்கு கிடைக்கிறது. எனவே, இந்த சீசனில் கிடைக்கும் மழை நீரை முழுமையாக சேகரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
'குறிப்பாக, 'ஜல் சக்தி அபியான்' மற்றும் தமிழக அரசின், குடிமராமத்து திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளுக்கு முன், துார்வாரி சீரமைக்கப்பட்ட, 35க்கும் மேற்பட்ட குளங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
பிற குளங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நீர் வரத்து ஓடைகளை துார்வாரி, கரைகளை வலுப்படுத்த வேண்டும்.
குளங்கள் குறித்து, தொடர் கண்காணிப்பு, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால், கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்; கிணற்றுப்பாசன சாகுபடி பரப்பும் அதிகரிக்கும்.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஆனால், உடுமலை ஒன்றிய நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், கனமழை பெய்தும் குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

