/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் பொருள் வினியோகம்; அக்ரஹாரப்புத்துாரில் அதிருப்தி
/
ரேஷன் பொருள் வினியோகம்; அக்ரஹாரப்புத்துாரில் அதிருப்தி
ரேஷன் பொருள் வினியோகம்; அக்ரஹாரப்புத்துாரில் அதிருப்தி
ரேஷன் பொருள் வினியோகம்; அக்ரஹாரப்புத்துாரில் அதிருப்தி
ADDED : ஆக 20, 2025 01:20 AM

திருப்பூர்; அக்ரஹாரப்புத்துார் ரேஷன் கடை நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த நிலையில், பொதுமக்கள் போராட்டத்தால், நேற்று கடை திறக்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு தாலுகா, மங்கலம் கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்டது அக்ரஹாரப்புத்துார் ரேஷன் கடை. கடை விற்பனையாளர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். சரியான மாற்று நபர் நியமனம் செய்யாததால், இம்மாதத்தில், ரேஷன் பொருள் வினியோகம் பாதிக்கப்பட்டது.நேற்றும், 'இன்று விடுமுறை' என்று எழுதி, கடை திறக்காமல் இருந்ததால், பொருள் வாங்கவந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து, போராட ஆயத்தமாகினர்; சிலர், சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடை விற்பனையாளருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், மாற்று நபரை நியமித்து, அத்தியாவசிய பொருள் வினியோகம் செய்ய வேண்டும். மாறாக, 19 நாட்களில், மூன்று நாட்கள் மட்டுமே விற்பனை நடந்துள்ளது; கூட்டுறவு சங்க அதிகாரிகள், ரேஷன் கடைக்கு சரியான மாற்று ஏற்பாடு செய்யவில்லை; மக்கள் குறித்து கவலையும் இல்லை. இதேநிலை நீடித்தால், அடுத்தகட்ட போராட்டம் நடக்கும்,' என்றனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கூட்டுறவுத்துறை துணை பதிவாளருக்கு புகார் அளித்தனர். அதன் எதிரொலியாக, மாற்று விற்பனையாளர்கள் கடைக்கு வந்து, காலை, 10:30 மணிக்கு மேல் கடையை திறந்து மாலை வரை பொருள் வினியோகம் செய்தனர்.