ADDED : பிப் 15, 2025 07:12 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடைகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அனைத்து கிராமங்களிலும், இது குறித்து அறிவிப்பு செய்து, குறிப்பிட்ட நாளில் இம் முகாம் நடத்தப்படும்.
இந்நிலையில் தற்போது, திருப்பூர் மாவட்டத்தில் அம்மை நோய்த் தாக்குதல் காரணமாக கால்நடைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கடந்த, 2024 டிச., மாதம் முதலே, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அம்மை நோய்த் தாக்குதல் உள்ளது குறித்தும், தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டியது குறித்தும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினோம்.
ஆனால், இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும், அதற்கான பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை. சமீபத்தில், நடத்திய தடுப்பூசி முகாம்களும் முழுமையாக அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படவில்லை.
தடுப்பூசி மருந்து தேவையான அளவு பெறப்படாமல் பல்வேறு கிராமங்களுக்கு முகாம் விடுபட்டு விட்டது. அவ்வகையில், அவிநாசி, நடுவச்சேரி கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை.
இதனால், இங்குள்ள மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடுகனுாரில் சுப்ரமணியம் என்பவரின் கன்றுக்குட்டி தற்போது அம்மை நோயால் பெரும் பாதிப்படைந்துள்ளது. இது, மேலும் பரவும் அபாயம் உள்ளது.
கால்நடைகளுக்கு அம்மை நோய் தாக்குதல் ஏற்படும் போது, கால்நடைகள் உயிரிழப்பு, பால் உற்பத்தி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். கிராமப் பகுதி விவசாயிகளின் பொருளாதாரமாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அரசு முறையாக இதனை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.