/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்
/
தீபாவளி இனிப்பு - காரம் சுவையுடன் தரமும் அவசியம்
ADDED : அக் 19, 2024 11:52 PM
தீபாவளி என்றால் இனிப்பு இல்லாமலா! இனிப்பு, கார வகை பலகாரங்கள், தின்பண்டங்களை, அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாக, உறவினர், நண்பர்களுக்கு பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம்.சிதையாத கூட்டுக்குடும்ப வாழ்க்கையில், வீடுகளில் உள்ள பெரியவர்கள், 10, 20 நாட்களுக்கு முன்பே பலவித பலகாரங்கள் செய்ய துவங்கிவிடுவர்.
விதம் விதமான பலகாரங்கள் வீடுகளிலேயே தயாராகும். ஆனால் இன்று, நிலைமை மாறிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை சூழல் ஒருபுறம், அதிகரித்துவிட்ட தனி குடித்தனங்கள் இன்னொரு புறம் போன்ற காரணங்களால், பலகாரங்களை கடைகளில் 'ஆர்டர்' செய்வது வழக்கத்துக்கு வந்து விட்டது.வாடிக்கையாளர்கள், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய அடுமனைகளை தயார் செய்து வருகின்றனர், இனிப்பு, கார வகை பலகாரம் செய்வோர். அந்த வகையில், 'தங்கள் தயாரிப்புகளை வாங்கி உண்பதால், எவ்வித உடல் உபாதையும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தயாரிப்பின் தரம் இருக்க வேண்டும்' என, அவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது உணவு பாதுகாப்புத்துறை. கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவில், ரமணாஸ் ஓட்டலில் நடந்த கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, இனிப்பு, காரம் தயாரிப்போருக்கு சில அறிவுரை வழங்கி, துண்டு பிரசுரம் வினியோகித்தார்.
புகார் செய்யலாம்
''உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாக உணவு தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று பெற்றுக் கொள்ளாமல் உணவு வணிகம் செய்வோர் குறித்த தகவலை 0421-2971190, 94440 42322 என்ற எண்ணில் புகாராக தெரிவிக்கலாம். அவ்வாறு, தகவல் தெரிவிப்போர் விபரம், ரகசியம் காக்கப்படும்,'' என்கிறார் உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை.