/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., கூட்டணியினர் நாளை ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணியினர் நாளை ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 01, 2025 12:29 AM
திருப்பூர்; அமெரிக்காவின் வரிவிதிப்பால், திருப்பூர் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதைப் பாதுகாக்க வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி சார்பில் திருப்பூரில் நாளை(2ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின், இப்பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக துவங்கியுள்ளன.
நாளை காலை 9:00 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், தினேஷ்குமார், பத்மநாபன் முன்னிலை வகிக்கின்றனர். நீலகிரி எம்.பி., ராஜா தலைமை வகிக்கிறார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
வைகோ, அர்ச்சுன்ராஜ் (ம.தி.மு.க.,), செல்வப்பெருந்தகை (காங்.,), திருமாவளவன் (வி.சி.க.,), சுப்பராயன் (இ.கம்யூ.,),வெங்கடேசன் ( மா.கம்யூ.,), ஈஸ்வரன் (கொ.ம.தே.க.,), ஜவாஹிருல்லா (ம.ம.க.,), முகமது அபுபக்கர் (இ.யூ.மு.லீக்), வேல்முருகன் (த.வா.க.,), தமிமுன் அன்சாரி(ம.ஜ.க.,), தங்கவேல் (ம.நீ.ம.,), அதியமான் (ஆதி தமிழர் பேரவை) உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டம் என்பதால், கட்சியினர் அதிகளவில் கொடிகளை எடுத்து வராமல், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கொடிகளைப் பயன்படுத்த வேண்டும். மேடையில் உள்ள தலைவர்கள் மற்றும் கூட்டத்தை மறைக்கும் வகையில் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.