/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்பில் முறைகேடு; தி.மு.க., மேயருக்கு அபராதம்
/
மின் இணைப்பில் முறைகேடு; தி.மு.க., மேயருக்கு அபராதம்
மின் இணைப்பில் முறைகேடு; தி.மு.க., மேயருக்கு அபராதம்
மின் இணைப்பில் முறைகேடு; தி.மு.க., மேயருக்கு அபராதம்
ADDED : டிச 03, 2025 03:44 AM

திருப்பூர்: கட்டுமான பணி நடக்கும் வீட்டில், மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய, திருப்பூர் மாநகராட்சி தி.மு.க., மேயருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு, காங்கேயம், புதுார் ரோடில் உள்ளது. அவரது வீட்டின் ஒரு பகுதியில், வீடு விரிவாக்கம் செய்ய, கட்டுமான பணி நடக்கிறது.
இதற்காக, வீட்டு மின் இணைப்பை ஒப்படைத்து விட்டு, தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்காலிக மின் இணைப்புக்கான, 'டிபாசிட்' தொகையை செலுத்தாததால், மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கட்டுமான பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக, மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பறக்கும் படையினர், மேயர் வீட்டில் நேற்று ஆய்வு செய்தனர். அதில், வீட்டு மின் இணைப்பை பயன்படுத்தி, கட்டுமான பணிகள் நடந்தது உறுதியானது.
இதனால், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய வகையில், மேயர் தினேஷ்குமாருக்கு, 42,500 ரூபாய் அபராதம் விதித்து, அந்த மின் இணைப்பை மின் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். மின்சார முறைகேடை கண்காணிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்த அப்பகுதி கிழக்கு டவுன் மின் ஊழியர்கள் இருவருக்கு, விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
மேயர் தினேஷ்குமார் கூறுகையில், ''என் தாய் பெயரில் தற்காலிக மின் இணைப்பு பெற, அக்., 13ல், மின் வாரியம் தெரிவித்த டிபாசிட் தொகை, 16,935 ரூபாயை செலுத்தினேன். ஆனால், மின் வாரியம் இணைப்பை தருவதில் தாமதம் செய்துவிட்டது. தற்போது, அபராத நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டரீதியாக விளக்கம் கேட்டு, மின் வாரியத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும்,'' என்றார்.

